- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

ஸ்ரீரங்கம் மருத்துவருக்கு ஆதரவாக நோயாளிகள் தர்ணா போராட்டம் பணி இட மாற்றத்தை எதிர்த்து…

திருச்சி, ஏப்.5-
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவரை பணி இட மாற்றம் செய்ததைக் கண்டித்து நோயாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
எலும்பு சிகிச்சை பிரிவு
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றுபவர் ஜான் விஸ்வநாதன். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9 மாத குழந்தையின் கை எலும்பு முறிந்ததைத் தொடர்ந்து கோவை, சென்னை உள்ளிட்ட பல ஊர் தனியார் மருத்துவமனைகளில் குணப்படுத்த முடியாது கையை எடுக்க வேண்டும்  என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில்  இவரை சந்தித்தபோது இதனை சவாலாக ஏற்று குணப்படுத்துகிறேன் என்று கூறி மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து அந்த குழந்தையின் கையை முற்றிலும் குணப்படுத்தி உள்ளார்.
சவால்
கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பணி அமர்த்தப்பட்ட அவர் கடந்த 3 மாதங்களுக்குள் 80-க்கும் மேற்பட்ட இலவச அறுவை சிகிச்சைகளை செய்து நோயாளிகளை குணமாக்கி உள்ளார். பொதுவாக சிக்கலான அறுவை சிகிச்சை என்றால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறுவது வழக்கம். ஆனால், எத்தனை சிக்கலான அறுவை சிகிச்சை என்றாலும் சவாலாக ஏற்று இலவச அறுவை சிகிச்சை நடைபெறுவதால் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எலும்பு சிகிச்சை பிரிவில் நோயாளிகள் குவியத்தொடங்கினர்.
பொதுமக்கள் ஆதரவு
இந்தநிலையில் நேற்று மருத்துவர் ஜான் விஸ்வநாதன் மணப்பாறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.  இதனை அறிந்த ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை நோயாளிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்கு முன்பாக மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டதற்காக தர்ணா போராட்டம் நடைபெறுவதை அறிந்து நோயாளிகளின் உறவினர்களும், குணமடைந்தோறும் போராட்டத்திற்கு ஆதரவாக திரண்டனர். அரசு மருத்துவர் ஒருவரை பணி இட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற தர்ணா போராட்டத்தால் ஸ்ரீரங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply