- ஆன்மிகம், செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது 21-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு…

திருச்சி, டிச.11-
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று வைக்குண்ட ஏகாதசி விழா தொடங்கியது. வருகிற 21-ந் தேதி சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது.
ஏகாதசி விழா
பூலோக வைக்குண்டம் எனப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்  கோவிலில் நடைபெறும் விழாக்களில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
இந்த விழா பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என 21 நாட்கள் நடைபெறும்.
பகல் பத்து விழாவில் நம்பெருமாள் தினமும் காலை பல்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல் பத்து பத்தாம் திருநாள் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு
ராப்பத்து முதல்நாள் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு 21-ந்தேதி  நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சொர்க்கவாசல் ராபத்து திருநாளின் 8-ம் திருநாளை தவிர மற்ற 9 நாட்கள் திறந்திருக்கும்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார். இந்த விழா நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தொடங்கியது. இதனையொட்டி ரங்கநாதர் கோவில் கர்ப்பகிரகத்தில் திருநெடுந்தாண்டகம் இரவு தொடங்கியது. சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகம் அபிநயம் நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கு திருப்பணியாரம் அமுது படைக்கப்பட்டது.
பகல் பத்து உற்சவம்
பகல் பத்து உற்சவம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. பகல் பத்து 10-ம் திருநாளான (20-தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ராப்பத்து முதல் நாளான 21-ந் தேதி முக்கிய விழாவான சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. ராப்பத்து 7-ம் திருநாளான 27-ந் தேதி திருகைத்தல சேவையும், 8-ம் திருநாளான 28-ந் தேதி வேடுபறி விழாவும், 10-ம் திருநாளான 30-ந் தேதி தீர்த்தவாரியும், 31-ந் தேதி நம்மாழ்வார் மோட்சம் வைபவமும் நடைபெறுகிறது.

Leave a Reply