- ஆன்மிகம், செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் நீள்முடி அலங்காரத்தில் சேவை பகல் பத்து விழா கோலாகல தொடக்கம்

திருச்சி, டிச.12:-திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து விழாவின் முதல்நாளான நேற்று நம்பெருமாள் நீள்முடி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகல் பத்து உற்சவம்

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்  கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என 21 நாட்கள் நடைபெறும். நேற்று பகல்பத்து உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி  நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தனுர் லக்னத்தில் நீள்முடி அலங்காரத்திலும், வைர அபயஹஸ்தம், முத்துமாலை, அடுக்கு பதக்கம், நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட பல ஆபரணங்கள் அணிந்து புறப்பட்டார்.

திருப்பாவாடை சேவை

பகல்பத்து ஆஸ்தான மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் காலை 7.45 மணிக்கு நம்பெருமாள் எழுந்தருளினார்.நண்பகல் 1 மணிவரை அரையர் சேவையுடன் பொது ஜனசேவை நடைபெற்றது. 2 மணி முதல் 3 மணிவரை திருப்பாவாடை கோஷ்டி சேவை நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 5.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெற்றது. மாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை புறப்பாட்டுக்கு திரையிடப்பட்டது.

முத்தங்கி அலங்காரம்

மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானத்தை அடைந்தார். மூலவர் பெருமாள் காலை 7.45 மணிமுதல் மாலை 6.30 மணி வரையிலும், மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
21ந்தேதி சொர்க்கவாசல்

10ம் திருநாளான (20ந் தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். ராப்பத்து முதல் நாளான 21ந்தேதி சொர்க்க வாசல் திறப்புவிழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன் செய்துள்ளனர்.

Leave a Reply