- செய்திகள், மாநிலச்செய்திகள்

ஸ்மிருதி இரானிக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் பா.ஜனதா பதிலடி தீர்மானம் தாக்கல்

புது டெல்லி, மார்ச் 2-

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் தீர்மானம்  தாக்கல் செய்து இருப்பதற்குப் பதிலடியாக, காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மீது பா.ஜனதா உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்து உள்ளது.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக  ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை விவகாரத்தில், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்தியதாகக் கூறி, காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் உரிமை மீறல் தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுத்து உள்ளனர்.

இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, அதே ரோகித் வெமுலா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு எதிராக, பா.ஜனதா தலைமை கொறடா அர்ஜுன் ராம் மெக்வால் மற்றும் பலர் உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர்.

தேச விரோதமானது

நேற்று மக்களவை தொடங்கியதும் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு இடையே, பா.ஜனதா தலைமை கொறடா அர்ஜுன் ராம் மெக்வால் உரிமை மீறல் தீர்மான பிரச்சினையை எழுப்பினார்.

அப்போது அவரும், மேலும் பல உறுப்பினர்களும் சிந்தியாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்து இருப்பதாக கூறிய மெக்வால், ‘‘மாணவர் ரோகித் வெமுலாவை மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அழைத்து பேசியதாக மக்களவையில் கடந்த 24-ந்தேதி சிந்தியா பேசியதன் மூலம், இந்த அவையை தவறாக வழி நடத்திவிட்டார். அவருடைய பேச்சு தேச விரோதமானது, சாதித்துவ மற்றும் தீவிரவாதத் தன்மை கொண்டதாகும்’’ என்று குறிப்பிட்டார்.

தத்தாத்ரேயா விளக்கம்

இந்த நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையின் மையப் பகுதிக்குச் சென்று, ஸ்மிருதி இரானிக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போதுஅமைச்சர் தத்தாத்ரேயா பேசும்போது கூறியதாவது-

சிந்தியா கூறியது போல், வெமுலா பற்றி நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிந்தியா முயற்சிக்கிறார். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது தாயார் வெங்காயம் விற்று வந்தார்.

நான் எப்போதுமே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்திருக்கிறேன். தலித்துகளுக்காக நான் தியாகம் செய்திருக்கிறேன். நான் அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதிய கடிதத்தில், வெமுலாவின் பெயர் பற்றியோ அல்லது அவருக்கு எதிரான குற்றச்சாட்டு பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை’’.

இவ்வாறு தத்தாத்ரேயா கூறினார்.

ஒத்திவைப்பு

அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் காங்கிரஸ் உறுப்பினர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை ஒத்தி வைத்தார்.

நேற்று முன்தினம் மக்களவையில் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தபோதும், ஸ்மிருதிக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் குறித்து காங்கிரசார் அமளியில் ஈடுபட்டனர்.

—-.

Leave a Reply