- சினிமா, செய்திகள், மாவட்டச்செய்திகள்

ஷாருக்கானின் ‘தில்வாலே’ படம் வெளியாக ராஜ் தாக்கரே கட்சி எதிர்ப்பு…..

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி அளித்ததால் சிக்கல்

மும்பை, டிச. 16:- ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘`தில்வாலே'’ படத்தை மகாராஷ்டிர மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, ராஜ்தாக்கரேவின் எம்.என்.எஸ். அமைப்பு  கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு, ஷாருக்கான் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு  அளித்த  நிதியே காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 ஆண்டுகளுக்கு முன்
இந்தி நடிகர் ஷாருக்கான், கஜோல், அனுபம் கேர் உள்ளிட்டோரின் நடிப்பில்,  ‘`தில்வாலே' துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற படம், 1995-ல் வெளியானது. இதற்கு `துணிச்சல்காரன் மணப்பெண்ணை தூக்கிச் செல்வான்' என்பது பொருள். மிகப்ெபரும் அளவில் பேசப்பட்ட, வெற்றி பெற்ற இந்த திரைப்படம், ஷாருக்கானின் திரை உலக வாழ்க்கையில் திருப்பு முனையை உண்டாக்கியது. படத்தை ஆதித்யா சோப்ரா இயக்கி இருந்தார்.

ஷாரூக் – கஜோல்
இந்நிலையில், 20-வது ஆண்டுகளுக்கு பின்னர், அந்தப்படத்தை தழுவி, ‘`தில்வாலே'’ என்ற பெயரில் புதிய படத்தை ஷாருக்கான் எடுத்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான்-கஜோல் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இதைத் தவிர, வருண் தவான், கிரித்தி சனோன் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ வெற்றிப் படத்தை இயக்கிய, பிரமாண்ட இயக்குனர் ரோகித் ஷெட்டி, `தில்வாலே' படத்தை இயக்கி உள்ளார். படவேலைகள் அனைத்தும்  முடிவடைந்து, நாளை  மறுதினம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில்தான்,  மகாராஷ்டிரா மாநிலத்தில் `தில்வாலே' படத்துக்கு திடீர் சிக்கல் உண்டாகி இருக்கிறது.

வந்தது சிக்கல்
சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்துக்கு, நிதி உதவியாக ரூ. 1 கோடியை ஷாருக்கான் அளித்து இருந்தார். இதுதான், அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்யாமல், தமிழகத்துக்கு ஷாருக்கான் உதவி செய்திருக்கிறார்; எனவே அவரது படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று, `சித்ரபாத் கர்மசாரி சேனா' என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமைப்பு, ராஜ்தாக்கரேவுடைய `மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா' (எம்.என்.எஸ்.) கட்சியின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
மராட்டியத்தை மறந்தார்
இதனால், இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, ராஜ் தாக்கரே கூறும்போது, சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 1 கோடியை ஷாருக்கான் வழங்கினார். ஆனால், மகாராஷ்டிராவில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளை அவர் மறந்து விட்டார். இதனை எங்களது துணை அமைப்பான சித்ரபாத் சேனா கண்டித்துள்ளது. இது சரியான முடிவுதான். மகாராஷ்டிராவுக்கு வந்து, பிரபலமாகி, பெயரையும் புகழையும் சம்பாதித்த பின்னர், இந்த மண்ணை மறப்பது என்பது சரியானதல்ல. இதனை ஷாருக்கான் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இறைவன் நாடினால்…
இந்த விவகாரம் குறித்து, ஷாருக்கானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில், `தில்வாலே' படத்துக்காக நாங்கள் கடுமையாக  உழைத்துள்ளோம். எனவே படத்தைப் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும். ஆனால், இதுபோன்ற சர்ச்சைகள் ஏன் ஏற்படுகின்றன என்று, என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இறைவன் நாடினால் எங்கள் படத்துக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படாது என்றார்.

Leave a Reply