- அரசியல் செய்திகள்

வைகை ஆற்றை கனிமொழி ஹெலிகாப்டரில் சென்று பார்த்தாரா? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எந்த திட்டமும் நிறைவேற்ற வில்லை என குற்றச்சாட்டு

மதுரையில் எந்தத் திட்டமும் நிறைவேற்றவில்லை என்று கனிமொழி சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் மதுரையில் வைகை ஆற்றை அவர் ஹெலிகாப்டரில் கடந்தாரா? என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நேற்று நடைபெற்ற தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது இயல்பான ஒரு விஷயம். அதற்கெல்லாம் அஞ்சுபவர் அவர் கிடையாது. இது போன்ற மிரட்டல்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கும் வந்திருக்கின்றன. மிரட்டியவர்களை காவல்துறை பார்த்துக் கொள்ளும்.

கனிமொழியின் பார்வையில் நாங்கள் மதுரைக்கு எதுவும் செய்யாதது போல் இருக்கிறது. ஆனால், நாங்கள் ஸ்மார்ட் சிட்டி, வைகை ஆறு, நத்தம் சாலை, பைபாஸ் ரோடு மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மதுரைக்கு வழங்கியிருக்கிறோம்.

ரூ.1300 கோடிக்கு முல்லைப்பெரியாறு அணை குடிநீர் திட்டம் வந்துள்ளது. கனிமொழியின் பார்வையில் அது எப்படிப் படாமல் போனது என்பது தெரியவில்லை. அவர் வைகை ஆற்றுப் பாலத்தை கடக்கும் பொழுது வைகை ஆற்றில் போடப்பட்ட மேம்பாலங்கள், தற்போது நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைப் பார்த்திருக்கலமாமே. அப்படி என்றால் வைகை ஆற்றை கடக்கும்போது கனிமொழி ஹெலிகாப்டர் மூலமாக வான்வழியாகச் சென்றாரா?, தரைவழியாக தானே சென்றிருக்கிறார்.

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்பது நியாயமான முறையிலும், தீர்க்கமான முறையிலும், தன்னிச்சையாக முதல்வர் மட்டுமே எடுத்த முடிவு. இதில் அனைத்து விவசாயிகளும், பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு கூட கடன் வாங்கி இருப்பவர்களுக்கு கூட விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது என்பது சாதனை. அதில் சிபிஐ விசாரணை கோருவது சரியானது அல்ல.

ஒரு மாநில அரசு வரம்பு மீறி கடன் வாங்க முடியாது. ஒரு துறையைப் பற்றி தெரியாத ஸ்டாலின் எப்படி துணை முதல்வராக, மேயராக இருந்தார் எனத் தெரியவில்லை. மத்திய அரசு வழிகாட்டுதல் படி குறைவாகவே கடன் வாங்கியுள்ளோம். தமிழக அரசு கடனில் தத்தளிக்கவில்லை என்றார்.

Leave a Reply