- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

வேலைவாய்ப்பை பெருக்குவதில் தனிக்கவனம் தேவை

சென்னை, ஏப். 1-
‘‘வேலைவாய்ப்பை பெருக்குவதில் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்’’ என ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
தொழில்துறை
இதுதொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி இந்தியாவில்  வேலைவாய்ப்பு பல்வேறு துறைகளில் தற்போது பின்தங்கியுள்ளது. பா.ஜ.க.வினர் ஆட்சிக்கு  வந்த பிறகு இதுவரை தொழில்துறையில் நம் நாடு முன்னேற்றம் காணவில்லை. பா.ஜனதா ஆட்சியில் 50 சதவீத வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. கடந்த 9 மாத காலத்தில் 1.55 லட்சம் பேருக்குத்தான் வேலை கிடைத்திருக்கிறது. தொழில்துறைகளிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும்  மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மிகவும் பின் தங்கியுள்ளது.

மேலும் நம் நாட்டின் முக்கிய தொழில்களான டெக்ஸ்டைல், கைத்தறி, ஆட்டோமொபைல், கனரக, வாகன உற்பத்தி, நகை தொழில், போக்குவரத்து, கணினி போன்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்ட பின்னடைவு காரணங்களால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டு, வேலை வாய்ப்பில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு நாட்டில் பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகள் மூடக்கூடிய நிலையில் உள்ளது.
வேலை இழக்கும் நிலை
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் தொழில் புரிய வரும் நிறுவனங்கள் லாபத்தை மட்டும் ஈட்டிவிட்டு,  பிறகு நிறுவனங்களை மூடிவிடுவதால் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு தொழில்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி, வேலை வாய்ப்பையும் பெருக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply