- செய்திகள்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 84 ஆயிரம் பேர் பதிவு செய்து காத்துள்ளனர் அமைச்சர் நிலோபர் தகவல்…

சென்னை, ஆக.17-
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 84 ஆயிரம்பேர் பதிவு செய்து காத்துள்ளனர் என்று சட்டசபையில் அமைச்சர் நிலோபர் தெரிவித்தார்.
சட்டசபையில் தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் நிலோபர் பதில் அளித்து பேசியதாவது:-
குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு
தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து சிறப்புப் பயிற்சி மையங்களில் கல்வி அளித்தல், குழந்தைகள் தரமான கல்வி கற்றிடவும், பெற்றோர்களின் சுமைகளைக் குறைத்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, சீருடைகள், சத்தான மதிய உணவு, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், மடிக்கணினிகள் என எண்ணற்ற உதவிகள் வழங்கப்படுவதுடன், உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு
500 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்குதல் போன்ற திட்டங்களையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி, குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களில் உள்ள சட்ட அமலாக்க அலுவலர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு தடுப்பு படைகள் மூலம், 7,16,983 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 221 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, 143 வழக்குகள் தொடரப்பட்டன.  இவற்றில் 101 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு 10 லட்சத்து 40 ரூபாய்  அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
காத்திருப்போர்
பள்ளிக் கல்வி முடித்த மாணவ மாணவியர், வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சென்று பதிவினை மேற்கொள்ள ஏற்படும் கால விரயம் மற்றும் பண விரயத்தினை முற்றிலுமாக தவிர்த்திடும் வகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத முன்னோடி திட்டமாக பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பதிவு செய்யும் மகத்தான திட்டம் செயல்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 84 லட்சத்து 32 ஆயிரத்து 971 பேர். இதில், 43 லட்சத்து 23 ஆயிரத்து 996 பேர் பெண்கள்.  இவர்களில் பெரும்பாலானோர் தற்போது உயர்கல்வி தொடர்ந்து படித்துக்கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
சிறப்பு புதுப்பித்தல்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் இருமுறை சிறப்பு புதுப்பித்தல் சலுகையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். 2012-ம் ஆண்டின்  சிறப்பு சலுகையில்  1,27,695 நபர்களும், 2014-ம் ஆண்டில் 1,10,694 பேர் பயன் அடைந்துள்ளனர்.
மகளிரும் தொழிற்பயிற்சி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று  மகளிருக்கு என்றே 3 தொழிற்பயிற்சி நிலையங்களை கரூர், நாமக்கல் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் ஓசூர் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் மகளிருக்கென வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட்டன.
தொழில் திறன் பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கென ஒரு கோடியே ஐம்பத்து ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.  கடந்த  5 ஆண்டுகளில்  2 லட்சத்து 27 ஆயிரத்து 106 இளைஞர்கள் இதுவரை பல்வேறு தொழில் திறன் பயிற்சிகள் பெற்றுள்ளனர்.
தொழிலாளர் நலம் பேணும் அரசு
தொழிலாளர்களுக்காக இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் எண்ணற்ற நலவாழ்வு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்திட்டங்கள் கடைக்கோடி தொழிலாளர்களையும் சென்றடையும் வகையில் தொழிலாளர் நலம் பேணும் அரசாக  முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு திகழ்கிறது.
இவ்வாறு அமைச்சர் நிலோபர் பேசினார்.

Leave a Reply