- ஆன்மிகம், செய்திகள், மாவட்டச்செய்திகள், வேலூர்

வேலூர் ஸ்ரீபுரத்தில் சக்தி அம்மாவின் 40-வது ஜெயந்தி விழா

பீகார் கவர்னர், மத்திய அமைச்சர் பங்கேற்பு
வேலூர்,ஜன.4-
வேலூர் நாராயணி பீடம் சக்தி அம்மாவின் 40-வது ஜெயந்தி விழா நேற்று ஸ்ரீபுரத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் பீகார் கவர்னர், மத்திய அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பேரணி
நாராயணி பீடம் சக்தி அம்மாவின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரியூரில் இருந்து, திருமலைக் கோடி வரை தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஜெய்ஸ்ரீராம் சேவா சங்கத்தினர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது.
முன்னதாக அதிகாலை 5 மணியளவில் கணபதி ஹோமம், நாராயணி ஹோமம், ஆயுள் ஹோமம், பூர்ணாஹூதி, மங்கள நாராயணி பூஜைகள் நடந்தன.
அம்மாவிடம் ஆசி
தொடர்ந்து சக்தி அம்மா மேடைக்கு வருகை தந்தார் அவருக்கு மலர்களால் அபிஷேகம் நடந்தது.
சிறப்பு விருந்தினர் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த், கவுரவ விருந்தினர் மத்திய அமைச்சர் விஜய் சாம்ப்ளா ஆகியோர் சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றனர்.
அருளுரை
இதை தொடர்ந்து சக்தி அம்மா அருளுரை வழங்கி பேசியதாவது
மனித வாழ்க்கை முழுமையடைய கல்வி, அறிவு, செல்வம், பலம் ஆகியவை அவசியம். இவற்றுடன் ஆன்மிகம் சேரும் போதுதான் மனித வாழ்க்கை முழுமையடையும்.
உலகில் உள்ள சகல ஜீவன்களும் அம்மாவின் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழ ஆசீர்வதிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இல.கணேசன்
இந்நிகழ்ச்சியில் கலவை சச்சிதானந்தம் சுவாமிகள், வாலாஜா தன்வந்திரி கோயில் சுவாமிகள், கோவை ஆதீனம், கலையரசு எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply