- செய்திகள்

வேலூர் காவல் நிலையத்தில், போதையில் பெண் ரகளை…

 

வேலூர் ஆக.25-

வேலூர் போலீஸ் நிலையத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் காதலன் தவிக்க விட்டதாக ஜெயிலில் புலம்பியுள்ளார்.

காதல்

வேலூர் துத்திப்பட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் விவேகானந்த் (வயது 23). பெங்களூர் காவேரிபுரத்தை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 24). பிளஸ் 2 படித்துள்ள இவர் கார்மெண்ட்ஸ்சில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கிடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அர்ச்சனா வேலூர் வந்தார். அவரது நகைகளை ரூ.15 ஆயிரத்துக்கு அடகு வைத்துவிட்டு இருவரும் தனியார் ஓட்டலில் மது அருந்தி பேச்சுலர் பார்ட்டி வைத்து ஜாலியாக இருந்தனர்.

அறை

போதை தலைக்கேறியதும் காதலனை பின்னால் அமரவைத்தபடி அர்ச்சனா பைக் ஓட்டி வந்தார். வேலூர் கோட்டை அருகே பெங்களூர் ரோட்டில் அர்ச்சனா தாறுமாறாக பைக் ஓட்டி வந்தார். பெங்களூர் ரோட்டில் கால்நடை ஆஸ்பத்திரி அருகே பைக் வேகமாக வந்தது. அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராம்குமார் அர்ச்சனா ஓட்டி வந்த பைக்கை மடக்கினார். அப்போது அர்ச்சனா சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமாரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைந்தார்.

விசாரணை

காதல் ஜோடியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது திமிறிய இளம்பெண் அர்ச்சனா என்னையா அடிக்க பார்க்கிறாய் என்று கூறியபடி இன்ஸ்பெக்டர் நிர்மலாவுக்கும் பளார் விட்டார். இதனால் அவரை பிடிக்கவே போலீசார் தயங்கி நின்றனர். பின்னர் ஒருவழியாக காதல் ஜோடியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்தது. அப்போது இளம்பெண் அர்ச்சனா காதலன் மீது வழக்குப்பதிவு செய்யாதீர்கள் என்று கூச்சலிட்டார்.

வழக்கு

உடனே காதல் ஜோடி கட்டிப்பிடித்து சினிமாவையே மிஞ்சும் அளவில் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்தனர். தட்டிக்கேட்ட போலீசாரை அர்ச்சனா அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் பேசினார். விவேகானந்த் மீது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அர்ச்சனா மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக அர்ச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புலம்பல்

ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட்டுடன் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்ட அர்ச்சனாவுக்கு கைதிகள் அணியும் சேலை வழங்கப்பட்டது. அப்போது போதை தெளிந்து சுயநினைவுக்கு வந்த அர்ச்சனா கண்கலங்கினார். பின்னர் புடவை அணிந்து கொண்டார். காதலனை காப்பாற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கினேன். அவர் மீது வழக்குபதிவு செய்யாமல் இருக்க கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவர் மீதான அன்பை வெளிப்படுத்தினேன். ஆனால் எனது காதலர் அவருடைய தாயார் வந்ததும் என்னை தவிக்கவிட்டு விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நான் என்ன செய்வேன் என்று புலம்பியுள்ளார்.

Leave a Reply