- செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…

 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அதிரடி வேட்டை

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜான்சன் சார்லஸ், எவின் லெவிஸ் தொடக்கம் தந்தனர். முகமது சமி முதல் ஓவரை வீசினார். ஆட்டத்தின் 2-வது பந்தை சார்லஸ் சிக்சருக்கு தூக்கி அதிரடி வேட்டையை தொடங்கி வைத்தார். அந்த ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளுடன் அந்த அணி 17 ரன்கள் சேர்த்தது.
245 ரன்கள்

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். அவர்களின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.
இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.

லெவிஸ் 49 பந்தில் 5 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் சதம் அடித்து ஆட்டமிழந்தார். சார்லஸ் 33 பந்தில் 6 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 79 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணியில் ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொகமது சமி 4 ஓவரில் 48 ரன்னும், புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் 43 ரன்னும், அஸ்வின் 4 ஓவரில் 36 ரன்னும், ஜடேஜா 3 ஓவரில் 39 ரன்னும், பின்னி ஒரே ஓவரில் 32 ரன்னும் விட்டுக்கொடுத்தனர்.
இந்தியா பேட்டிங்

இதையடுத்து 246 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டி இந்திய அணி களமிறங்கியது. ரகானே 7 ரன்களிலும், விராட் கோஹ்லி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 4.4 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது.
இதையடுத்து ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சற்றும் சளைக்காமல் அதிரடியாக சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்டனர். இதனால் 8.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. ரோகித் சர்மா 22 பந்துகளிலும், ராகுல் 26 பந்துகளிலும் அரைசதம் விளாசினர். சிறப்பாக விளையாடி வந்த ரோகித் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதிர்ஷ்டம்

இதனையடுத்து, ராகுல் உடன் கேப்டன் டோணி இணைந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16.2 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராகுல், 46 பந்துகளில் சதம் விளாசினார்.
இதனால் 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது. இறுதியாக கடைசி ஒவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்திலேயே டோணி கொடுத்த கேட்சை சாமுவேல் தவறவிட்டார். அப்போது அதிர்ஷ்ட காற்று இந்தியா பக்கம் வீசியது.
இந்தியா தோல்வி

ஆனாலும் அந்த பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2-வது பந்தில் ராகுல் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை டோணி சந்தித்தார். லெக் பை மூலம் ஒரு ரன் கிடைத்தது. இதனால் கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் தேவையாக இருந்தது.
4-வது பந்தை சந்தித்த ராகுல் ஒரு ரன் எடுக்க, 5-வது பந்தில் டோணி 2 ரன்கள் எடுத்தார். இதனால், கடைசி பந்தில் 2 ரன்கள் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. ஆட்டத்தின் மிகவும் பரபரப்பான கட்டத்தில் கடைசி பந்தை பிராவோ வீச, டோணி சாமுவேல்ஸ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன்னில் வெற்றியை ருசித்தது.

கே.எல்.ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல், 51 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார். டோணி, 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேற்கிந்திய தீவுகள் அணியில் சதம் அடித்த லெவிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply