- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

வெள்ள நிவாரணம் வழங்க கோரி தாசில்தார் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

கூடுவாஞ்சேரி,மார்ச்.2:
காரணைபுதுச்சேரி ஊராட்சியில், வெள்ள நிவாரணம் வழங்க கோரி, ஊராட்சி வி.ஏ.ஓ. அலுவலகத்தில், செங்கல்பட்டு தாசில்தாரை பெண்கள் முற்றுகையிட்டதால்   பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்கள் முற்றுகை
சென்னை ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரியில், காரணைபுதுச்சேரி, காட்டூர், விநாயகபுரம், பெரியார்நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்தனர். ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து, காரணைப்புதுச்சேரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலரிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் அனிதா இளவரசன், செங்கல்பட்டு தாசில்தார் ரவிக்குமார், கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் பாலச்சந்திரன் ஆகியோர், முற்றுகையிட்ட பெண்களை சமாதானம் செய்தார்.
நிவாரணம் கிடைக்காவிட்டால்….
அப்போது பெண்கள் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மழை நிவாரணம் வழங்கப்படவில்லை. ஒருவாரத்துக்குள் மழை நிவாரணம் எங்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக செங்கல்பட்டு தாசில்தார் ரவிக்குமார் உறுது அளித்தார்.இந்த சம்பவத்தால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply