- உலகச்செய்திகள், செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி இந்திய பெண் பொறியாளர் உள்ளிட்ட 6 பேர் பலி அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் பேய் மழை

ஹூஸ்டன், ஏப். 20:-

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் புயல்காற்றுடன் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, இந்தியப் பெண் பொறியாளர் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள்.

டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன், ஹாரிஸ் கவுண்டி பகுதிகளில் கடுமையான புயல்காற்றுடன் நேற்றுமுன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நகர்பகுதிகளில் 8 முதல் 16 இன்ஞ் வரை மழைநீர் தேங்கி இருக்கிறது. பலத்த மழை காரணமாக நகரில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன, மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருப்பதால்  ஏறக்குறைய 1.21 லட்சம் மக்கள் இருளில் இருக்கிறார்கள். விமான நிலையத்திலும் மழைநீர் தேங்கியிருப்பதால், 470 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டன. சாலைப் போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது. இதே போன்று, ஹாரிஸ் கவுன்டி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் முழ்கி உள்ளன.

இந்நிலையில், பெக்டெல் ஆயில் நிறுவனத்தில் இந்தியப் பெண் பொறியாளர் சுனிதா சிங்(47வயது) பணியாற்றி வருகிறார். மழை பெய்தபோது, தனது காரில் அலுவலகத்துக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை போலீசார் உதவியுடன் அவரின் கணவர் ராஜீவ் சிங் தேடியபோது, வெள்ளத்தில் சிக்கி அவரின் கார் இழுத்துச் செல்லப்பட்டு, காருக்குள் சுனிதா சிங் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இது போல் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள் என அதிகாரிகள் தெரிவித்தார்.

ஹூஸ்டன் நகரில் ஏற்பட்ட புயலும், மழையும் வரலாற்றில் எப்போதும் இல்லாத ஒன்று என்று உள்ளூர் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply