- செய்திகள்

வெறி நாய்களை ஊசி போட்டு கொல்ல எதிர்ப்பு கேரளாவில்…

திருவனந்தபுரம் ஆக.25-

தெருநாய்களை விஷஊசி போட்டு கொல்லும்படி  முதல் மந்திரி பினராய் விஜயன் பிறப்பித்துள்ள உத்தரவு – கேரள அரசின்  முடிவுக்கு விலங்குகள் நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அட்டகாசம்

கேரளாவில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. திருவனந்தபுரம் தொடுபுழா, காசர்கோடு, வயநாடு, கொச்சி போன்ற இடங்களில் தெருக்களில் நாய்கள் சர்வசாதாரனமாக சுற்றித்திரிகிறது. மேலும் இந்த நாய்கள் பொதுமக்களை கடித்து குதறும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் நாய் கடிக்கு சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு படை எடுக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

உயிர் இழப்பு

வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அந்த நாய்கள் குட்டிகள் போடும்போது பெண் குட்டிகளை தெருக்களில் போட்டு விடுகிறார்கள். இவை வளர்ந்து பெருகி தற்போது பெரும் தலைவலியாக மாறி உள்ளது. மீன் மார்க்கெட்டுகள், கடற்கரை பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக மக்களை மிரட்டும் வகையில் சுற்றித்திரிகின்றன. நாய் கடிக்கு குழந்தைகள் உள்பட பலர் பலியாகி உள்ளனர். சமீபத்தில் திருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் புல்லுவிளையை சேர்ந்த சிலுவையம்மாள் என்ற மூதாட்டி கடற்கரைக்கு சென்ற போது தெரு நாய்கள் அவரை சூழ்ந்துகொண்டு கடித்து குதறியதில் அவர் உயிர் இழந்தார். இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உத்தரவு

இதனால் தெருநாய்கள் அட்டகாசத்தை ஒடுக்க வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் வெறி நாய்களை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாய் தொல்லையை கட்டுப்படுத்த அவற்றிற்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது. வெறி நாய்களை வி‌ஷ ஊசி போட்டு கொல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய பினராய் விஜயன் உத்தரவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது "வெறி நாய்களை கொல்ல சட்டத்தில் இடம் உள்ளது" என்றார்.

ஒத்துழைப்பு

இதேபோல திருவனந்தபுரம் மாநகராட்சி சார்பிலும் வெறி நாய்களை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆந்திராவில் இருந்து நரிக்குறவர்களை வரவழைத்து வெறி நாய்களை பிடித்து கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தெருநாய்களை விஷஊசி போட்டு கொல்லும்படி முதல் மந்திரி பினராய் விஜயன் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு  கேரள அரசின் முடிவுக்கு இங்குள்ள விலங்குகள் நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, நிருபர்களுக்கு பேட்டியளித்த விலங்குகளுக்கான மனிதர்கள் நல அமைப்பின் கேரள மாநில பிரதிநிதியான ரனீஷ் பெரம்பா, தெருநாய்களுக்கு கருத்தடை செய்து கட்டுப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

கண்டனம்

ஆனால், தெருநாய்களின் அத்துமீறல் பெருகி வருவதற்கான அடிப்படையான வேர் காரணத்தை இந்த அரசு கவனித்தாக வேண்டும். உணவுக்கழிவுகள் மற்றும் குப்பை கூளங்களை உரிய முறையில் அப்புறப்படுத்த முன்வராத மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் குளறுபடிகளை களைய அரசு முன்வர வேண்டும். அவ்வாறின்றி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி நாய்களை சுட்டுக் கொல்ல முடிவெடுத்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்’ என தெரிவித்துள்ளார். இதேபோல் மாநிலத்தில் உள்ள வேறுசில விலங்குகள் நல அமைப்புகளும் அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply