- செய்திகள், மகளிர்

வெஜிடபிள் தேங்காய்ப்பால் கறி

ருசியோ ருசி
டாக்டர் செஃப் கே.தாமோதரன்

தேவை
கேரட் –- 150 கிராம்
பீன்ஸ் –- 100 கிராம்
உருளைக்கிழங்கு -– 200 கிராம்
செளசெள, தக்காளி, வெங்காயம் –- தலா 150 கிராம்
கொத்தமல்லி -– ¼ கட்டு
ஏலக்காய், பட்டை, லவங்கம் – தலா 2
மிளகுத்தூள் –- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கட்டு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் -– ½ கப்

செய்முறை
எல்லா காய்களையும் நறுக்கிக் கொள்ளவும்.  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், கறிவேப்பிலை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.  இதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும்.  இத்துடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வாசனை வரும்வரை நன்றாக வதக்கவும்.  நறுக்கிய காய்கறிகளை சேர்த்து காய்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர்விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.  காய்கறிகள் முக்கால் பதம் வெந்து, அதில் உள்ள தண்ணீர் சுண்டியதும், தேங்காய்பாலை சேர்க்கவும்.
காரம் குறைவாக இருந்தால் சிறிது மிளகுத்தூள், உப்பு சேர்த்து திக்காக மாறும் வரை வேகவிடவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும். தேங்காய் பால் கறி ரெடி!
இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:  காய்கறிகள் 90% வெந்த பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்தால் திரிதிரியாக இல்லாமல் காய்கறிகளுடன் நன்கு கலந்துவிடும்.

Leave a Reply