- விளையாட்டு

வீனஸ், சிலிச் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ், மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 25-ம் நிலை வீராங்கனையான டயானா யாஸ்ட்ரிம்ஸ்கா (உக்ரைன்) 5-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அடைந்தார். ஆட்டத்தின் போது வலது கணுக்கால் வலியால் யாஸ்ட்ரிம்ஸ்கா அவதிப்பட்ட போதிலும் சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடி 2 மணி 36 நிமிடங்களில் வெற்றிக்கனியை பறித்தார்.

மற்றொரு முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-2, 6-3 என்ற நேர் செட்டில் டோனா வெகிச்சை (குரோஷியா) பந்தாடினார். இதே போல் மரியா சக்காரி (கிரீஸ்) 6-1, 6-3 என்ற நேர் செட்டில் உள்ளூர் நட்சத்திரம் 16 வயதான கோரி காப்பை விரட்டினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 7-6 (6), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோவை போராடி தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். காயத்தால் ஓராண்டுக்கு பிறகு களம் திரும்பிய முர்ரே அடுத்து அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார். அதே சமயம் முன்னாள் சாம்பியனான மரின் சிலிச் (குரோஷியா) 3-6, 3-6 என்ற நேர் செட்டில் டெனிஸ் ஷபோவலாவிடம் (கனடா) வீழ்ந்தார்.

Leave a Reply