- செய்திகள், தேசியச்செய்திகள்

வீட்டில் ஒரு நாள், ரோட்டில் மறுநாள்-கார் ஓட்டும் திட்டம் காற்று மாசைக் குறைக்க கெஜ்ரிவாலின் புதிய முயற்சி…

புதுடெல்லி, ஜன. 2:-

நாட்டிலேயே முதன் முறையாக,  காற்று மாசுபடுவது அதிகரித்து வருவதை தடுக்க, டெல்லி அரசு கொண்டு வந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, ஒற்றை-இரட்டைப் படை பதிவு எண் கார்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்றி மாற்றி இயக்கும் திட்டம் நேற்று நடைமுறைக்கு வந்தது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

காற்று மாசு
தலைநகர் டெல்லியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காற்று மாசடைந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடும் புகையும் இந்த காற்று மாசுக்கு முக்கிய காரணமாகும். எனவே காற்று மாசைத் தடுக்கும் முதல் நடவடிக்கையாக வாகனப் போக்குவரத்தை குறைக்க டெல்லி அரசு முடிவு செய்தது.

இதையடுத்து கார்களின் பதிவு எண்களைக் கொண்டு மாற்றுத் தேதிகளில் கார்களை இயக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
சோதனை முறையில் அமல்

இதன்படி பதிவு எண்ணில் ஒற்றைப்படை எண்ணுடன் முடியும் கார்களும், இரட்டைப்படை எண்களுடன் முடியும் கார்களும் ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பெண்கள் இயக்கும் வாகனங்கள், ராணுவ வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என 25 பிரிவுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் சோதனை முறையில் நேற்று அமலுக்கு வந்தது. நேற்று தொடங்கி உள்ள இது, வரும் 15-ந் தேதி வரை 15 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். ஒற்றைப்படை கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை கார்கள் இரட்டைப்படை தேதிகளிலும் இயக்கப்படும். வார நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைமுறையில் இருக்கும். ஒற்றைப்படை ேததியான (1-ந் தேதி) நேற்று டெல்லியில் ஒற்றைப்படை எண்ணுடன் முடிந்த கார்கள் இயங்கின.
இந்த திட்டம் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. 200 போக்குவரத்து போலீசார் குழுக்கள், 66 போக்குவரத்து பணியாளர்கள் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கூடுதலாக 3 ஆயிரம் பேருந்துகளும், சிறப்பு  இயக்கப்பட்டன. ெமட்ரோ ரெயில்களும் அதிக முறை இயக்கப்பட்டது.

முழு வெற்றி
இந்த திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்படி, முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து இருந்தார். டெல்லியில் பெரும்பாலான பகுதிகளில் ஒற்றைப்படை கார்கள் இயங்கின. மக்கள் கூட்டாக சேர்ந்து ஒரே காரில் பயணித்தனர். சில இடங்களில் விதியை மீறி கார்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த திட்டம் முழுமையாக வெற்றி அடைந்து விட்டதாக ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1-ந் தேதியான நேற்று விடுமுறை தினம் என்பதால் பொதுவாகவே வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும். இதனால் திட்டத்தின் வெற்றியை முதல் நாளிலேயே தீர்மானிக்க முடியாது என்றும், அலுவலக நாளான திங்கட்கிழமை (4-ந் தேதி) அன்றுதான் திட்டத்துக்கான வரவேற்பு தெரியும் என்று கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் அஜய் மக்கான் கூறுகையில், ‘புத்தாண்டுக்காக மக்கள் வெளியூர் சென்று இருப்பதால் பொதுவாகவே போக்குவரத்து குறைவாக உள்ளது. இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து தற்போது முடிவு செய்ய முடியாது’, என்றார்.

மறு ஆய்வு

15-ந் தேதிக்குப் பிறகு இந்த திட்டம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு இதை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
நாட்டிலேயே முதன் முறையாக காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், டெல்லி ஆம் ஆத்மி அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. டெல்லி அரசின் லட்சியத் திட்டமான இதன் செயல்பாட்டை, நாடே ஆர்வமாக கவனித்து வருகிறது.

—————-

பாக்ஸ் -1

ரோஜா பூக்களுடன் ஆர்வலர்கள்
வீட்டில் ஒரு நாள், ரோட்டில் மறுநாள் என்ற கார்களுக்கான சோதனை திட்டதை வெற்றிகரமாக செயல்படுத்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தாங்களாக பணியில் ஈடுபட்டனர். அவர்கள் போக்குவரத்து போலீசாருடன் நின்று கொண்ட, மக்களுக்கு வண்ண வண்ண ரோஜாப் பூக்களைக் கொடுத்து திட்டம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

———

பாக்ஸ் -2

டெல்லி காட்டும் புதிய பாதை

முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள மக்கள் இந்த கட்டுப்பாட்டை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்கள் தாங்களாக முன்வந்து திட்டத்தை கடைபிடிக்க வேண்டும், நிர்பந்தத்தால் ஒரு திட்டம் எப்போதும் வெற்றி பெற முடியாது என்பதை நான் பலமுறை கூறியுள்ளேன். இந்த திட்டம் ஒரு இயக்கமாக மாறிவிட்டது. மக்கள் அளித்துள்ள வரவேற்பு எங்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. சாதிக்க முடியாததை டெல்லி மக்கள் சாதித்துக்காட்டி உள்ளனர். நாட்டுக்கு டெல்லி ஒரு புதிய பாதையை காட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

——–
பாக்ஸ் -3

அமைச்சர்களுடன் ஒரே காரில்

ஒற்றைப்படை  எண்ணில் முடியும் காரை வைத்திருக்கும் முதல்-அமைச்சர் கெஜ்ரிவால், போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய், சுகாதாரத்துறை அமைச்சர்  சத்யேந்திரா ஜெய் ஆகியோரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு நேற்று பயணம் செய்தார்.

————

பாக்ஸ் -4

ஆட்டோ, பஸ், டூ-விலரில் வந்த அமைச்சர்கள்

ஒற்றை-இரட்டைப்படை திட்டத்தை முன்னிட்டு டெல்லி சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஷ்ரா தனது டூ-வீலரில் தலைமைச் செயலகத்துக்கு வந்தார். இது பற்றி டுவிட்டரில் அமைச்சர் கூறுகையில், இந்த திட்டத்தை வெற்றித் திட்டமாக மக்கள் மாற்றி இருப்பதாக கூறினார். டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசைன் ஆட்டோவிலும், சமூக நலத்துறை அமைச்சர் சந்தீப் குமார் பஸ்சிலும் தலைமைச் செயலகத்துக்கு வந்தனர்.

பாக்ஸ் -5

டுவிட்டரில் உதவி
பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பஸ், மெட்ரோ ரெயில், ஆட்டோ ரிக்‌ஷா வசதி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. டுவிட்டரில் ஒருவர் புறப்படும் இடத்தையும், சேர வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டு ‘பொலுசன்பிரிடெல்லி’ என்ற ஆஷ்டாக்குடன் டுவிட் செய்தால், இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பாக்ஸ் -6

33 நிமிடத்தில் முதல் அபராதம்

ஒற்றை-இரட்டைப்  படைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து 33 நிமிடங்களில், ஐ.டி.ஓ. சந்திப்பு  பகுதியில் விதி மீறியதற்காக ஒருவருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  பாரி சவுக் பகுதியில் இருந்து அலுவலகம் நோக்கி சென்ற அவர் இரட்டை படை  எண்ணில் முடியும் காரை ஓட்டி வந்தார். பாரி சவுக் பகுதியில் இருந்து  போதுமான பொது போக்குவரத்து வசதி இல்லாததால், வேறு வழியில்லாமல் இரட்டை படை  எண் காரில் வந்ததாக அவர் போலீசாரிடம் கூறினார்.

——

பாக்ஸ் 7

மாணவர்கள் சைக்கிள் பேரணி

டெல்லியில் குளிர்காலத்துக்காக பள்ளி, கல்லூரிகள் விடுமுறையில் உள்ளன. இந்த நிலையில், திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்தினர். இவர்கள் ‘டெல்லியைப் பாதுகாப்போம், இந்தியாவைப் பாதுகாப்போம்’ என்று கோஷமிட்டனர்.

Leave a Reply