- உலகச்செய்திகள், செய்திகள்

விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி, ட்ரம்ப் தோல்வி அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்

வாஷிங்டன், ஏப். 7:- அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில், விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி கிளிண்டனும் டொனால்ட் ட்ரம்பும் தோல்வி அடைந்துள்ளனர்..

இந்தாண்டு இறுதியில்…

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, இந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக, கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில், நாட்டின் பிரதான கட்சிகளான குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளர் போட்டி தீவிரம் அடைந்துள்ளது.

விதிமுறைகள்

குடியரசு கட்சியின் சார்பில் ஒருவர் அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்றால், அவருக்கு குறைந்தபட்சம் 1,237 கட்சி பிரதிநிதிகளின் ஆதரவு அவசியம். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஆகுவதற்கு, குறைந்தது 2,383  கட்சிப் பிரதிநிதிகள் ஆதரவு தேவை. அந்த வகையில், குடியரசு கட்சி சார்பாக, அதிபர் வேட்பாளருக்கு விருப்பம் தெரிவித்து இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் டெட் குரூஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜனநாயக கட்சியில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டனுக்கும், பெர்னி சாண்டர்சுக்கும் மத்தியில் போட்டி காணப்படுகிறது.

அதிர்ச்சி முடிவுகள்

கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உட்கட்சி வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த வகையில், நேற்று முன் தினம் விஸ்கான்சின் மாநிலத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்புக்கு 35 சதவீத வாக்குகளும், 3 பிரதிநிதிகள் ஆதரவும் கிடைத்தன. ெடட் குரூசுக்கு 48 சதவீத ஆதரவும் 33 பிரதிநிதிகள் வாக்குகளும் கிடைத்தன. ஜனநாயக கட்சியில், ஹிலாரி கிளிண்டன் 43 சதவீத ஆதரவையும், 36 கட்சி பிரதிநிதிகள் வாக்குகளையும் பெற்றார். பெர்னி சாண்டர்ஸ் 57 சதவீத ஆதரவையும், 47 கட்சி பிரதிநிதிகள் வாக்குகளையும் தன்வசமாக்கினார்.

இந்த புதிய முடிவுகளின் விளைவாக, குடியரசு கட்சியில் டொனால்ட் ட்ரம்புடைய பிரநிதிகள் வாக்கு 737 ஆகவும், டெட் குரூசுக்கு 502 ஆகவும் உள்ளது. ஜனநாயக கட்சியில், ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 1,279 உறுப்பினர்களும், பெர்னி சாண்டர்சுக்கு ஆதரவாக 1,027 உறுப்பினர்களும் வாக்களித்து உள்ளனர்.

Leave a Reply