- செய்திகள்

விவசாயிகளுடன் 6-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது வேளாண் சட்டங்களை திரும்ப பெற தொடர்ந்து வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்று 6-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 35-வது நாளாக நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஏற்கனவே நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துள்ள நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதை விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.

அதேநேரத்தில் விவசாயிகள் 4 நிபந்தனைகளை விதித்தனர். 3 சட்டங்களையும் வாபஸ் வாங்கியே தீர வேண்டும். விளை பொருட் கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பது சம்பந்தமாக சட்டம் கொண்டு வரவேண்டும். புதிய மின்சார சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும். டெல்லி மற்றும் புறநகர் சுற்றுச்சூழல் அவசர சட்டத்தில் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் அம்சங்களை நீக்க வேண்டும். இந்த வி‌ஷயங்கள் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று கூறியிருந்தனர்.

விவசாயிகள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லி விஞ்ஞான் பவனில் பேச்சுவார்த்தை தொடங்கியது. மத்திய அரசின் சார்பில் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், மத்திய வர்த்தக தொழில் இணை மந்திரி சோம்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தரப்பில் 40 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் விவசாயிகள் புதிதாக ஒரு நிபந்தனையை விதித்துள்ளனர். அதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக புதிதாக ஒரு கடிதத்தையும் மத்திய அரசுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? என்பது தெரியவில்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply