- அரசியல் செய்திகள்

விவசாயிகளின் வலியை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை ராகுல் காந்தி பேச்சு

வயநாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இரண்டு மூன்று நபர்கள் இந்திய விவசாயத்தை சொந்தமாக்கவும் கட்டுப்படுத்தவும் வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, முட்டில் பகுதியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது. ஆனால் மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பாப் நட்சத்திரங்கள் நம்மிடம் உள்ளனர், ஆனால் இந்திய அரசு அக்கறை காட்டவில்லை.

தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கட்டாயப்படுத்தப்படாவிட்டால் இந்த 3 புதிய சட்டங்களை அவர்கள் திரும்பப் பெறப்போவதில்லை. இந்த 3 சட்டங்கள் இந்தியாவில் விவசாய முறையை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாரத மாதாவுக்கு சொந்தமான ஒரே தொழில் விவசாயம். மற்ற ஒவ்வொரு வணிகமும் மற்றவர்களுக்கு சொந்தமானது. ஒரு சிலர் விவசாயத்தை சொந்தமாக்க விரும்புகிறார்கள். 2-3 பேர் இந்திய விவசாயத்தை சொந்தமாக வைத்திருக்கவும் கட்டுப்படுத்தவும் இந்த 3 சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தில் உள்ள இரண்டு பேர் அரசாங்கத்திற்கு வெளியே இரண்டு நபர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply