- செய்திகள், தஞ்சாவூர், மாவட்டச்செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி 40 இடங்களில் நாளை ரெயில் மறியல்…

தஞ்சை, ஏப்.4-
விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) தஞ்சை உள்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது.

விவசாயிகள் கோரிக்கை
கூட்டுறவு தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனுக்காக ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகளில் கரும்பு நிலை தொகையை உடனே கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் நாளை (5ம் தேதி) தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று கூட்டு இயக்கங்களின் தலைவர் தெய்வசிகாமணி அறிவித்து இருந்தார். இதற்கு தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளதாக அறிவித்து இருந்தது.
40 இடங்களில்
இந்தநிலையில் தஞ்சை, கும்பகோணம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட  டெல்டா மாவட்டங்களில் நாளை (5ம் தேதி) 40 இடங்களில் ரெயில் மறியல் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை ரயில் நிலையம், பூதலூர் ரயில் நிலையம், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம் ஆகிய இடங்களிலும் மற்றும் நாகை மாவட்டத்திலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply