- செய்திகள், விளையாட்டு

விளையாட்டு வீரர்கள் கடும் கண்டனம் ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக சல்மான் நியமனம்

புதுடெல்லி, ஏப்.25:-
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் நல்லெண்ண தூதராக ஹிந்தி நடிகர் சல்மான்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் மில்கா சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள யோகேஷ்வர், தனது டிவிட்டர் இணைய தளத்தில் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் ஒலிம்பிக் போட்டி திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்கான இடம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

நல்லெண்ணத் தூதரின் பங்கு என்ன என்பதை யாராவது கூறமுடியுமா, எதற்காக மக்களை முட்டாள் ஆக்குகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தடகள வீராங்கனை பி.டி. உஷா, மில்கா சிங் போன்றவர்கள் விளையாட்டுத் துறைக்காக எவ்வளவோ செய்திருக்கும் நிலையில் அவர்களை விடுத்து, விளையாட்டுக்கு என்று எதுவும் செய்யாத சல்மான்கானை நியமித்துள்ளது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.

நல்லெண்ண தூதரை நியமிப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது. அப்படியிருந்தாலும் ஒரு விளையாட்டு வீரரை நியமித்திருக்கலாமே என்றும் வினா எழுப்பியுள்ளார். நாட்டுக்குத் தேவை பதக்கங்கள் தானே தவிர ஸ்பான்சர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதற்காக நடிகர்?
ஹிந்தி நடிகர் ஒருவரை நல்லெண்ண தூதராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று இந்தியாவின் முன்னாள் பிரபல தடகள வீரர் மில்கா சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனகுக்கு சல்மான்கான் மீது தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் கிடையாது என்றும் விளையாட்டு வீரர் ஒருவர் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாலிபால், தடகளம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் எத்தனையோ பேர் இருக்கையில் நடிகர் ஒருவரை நல்லெண்ண தூதராக நியமிக்க வேண்டிய தேவைதான் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்காக ரத்தத்தையும், வியர்வையையும் சிந்திய பி.டி. உஷா, ராஜ்யவர்தன் சிங் ரதோர், அஜித் பால் போன்றவர்கள் இருக்கையில் எதற்காக நடிகர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
தான் நிச்சயமாக சல்மான் கானுக்கு தனிப்பட்ட முறையில் எதிரி அல்ல என்று உறுதியாக தெரிவித்த மில்கா சிங், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முடிவு தவறானது என்றும் அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மில்கா சிங் 1958, 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிரபலமான ஒருவர் உதவி செய்யுமாறு அழைப்பு விடுத்தால் அதற்கான பலன் அதிகமாக இருக்கும் என்றும் அது விளையாட்டு துறைக்கு நல்லது என்பதால் சல்மான் கான் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர்  தர்லோசன் சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply