- செய்திகள், விளையாட்டு

விளையாட்டுத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

 
புதுடெல்லி, ஏப்.20:-
விளையாட்டுத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சரை அணுக அகில இந்திய விளையாட்டு கவுன்சில் முடிவு செய்துள்ளது.

அகில இந்திய விளையாட்டுத் துறை கவுன்சிலின் கூட்டம் அதன் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் நடப்பு நிதி நிலை அறிக்கையில் விளையாட்டுத் துறைக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூட்டத்தில் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்ததாகவும், ஆகையால் விஜய்குமார் தலைமையிலான பிரதிநிதிகள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து கூடுதலாக நிதி ஒதுக்க வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் விளையாட்டுத் துறைக்காக ரூபாய் 1592 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூபாய் 1541.13 கோடி ஒதுக்கப்பட்டது. அதாவது இந்த ஆண்டு 50.87 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தீபா கர்மாகருக்கு உறுப்பினர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

முன்னதாக, ரியோல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள உறுப்பினர்களின் பட்டியலை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் இன்ஜேதி ஸ்ரீனிவாசன் சமர்ப்பித்தார்.

அதில் ரியோ ஒலிம்பிக் போட்டிக்காக 8 பிரிவுகளில் 75 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்றும் இது 111 ஆக உயர வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் பேசிய விளையாட்டுத் துறை செயலாளர் ராஜீவ் யாதவ், ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய உணவை வழங்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சம்மதம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தி வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் மத்திய அரசு சார்பில் அகில இந்திய விளையாட்டு கவுன்சில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply