- செய்திகள், விளையாட்டு

விலகினார் ஷாகித் அப்ரிதி பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து

கராச்சி, ஏப். 4:-
பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிதி நேற்று விலகினார். இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பல போராட்டங்களுக்குப் பின், பாகிஸ்தான் அணி பங்கேற்றது. ஆனால், அந்த அணி சூப்பர்-10 சுற்றில் 4-ல் 3 போட்டிகளில் தோல்வி அடைந்து, அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் திரும்பிச் சென்றது.

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய ரசிகர்கள் அளித்த வரவேற்பு, அதிகாரிகள் அளித்த பாதுகாப்பு குறித்து அப்ரிதி பெருமையாக தெரிவித்த கருத்துக்கள் அந்நாட்டு வாரியத்தை கொம்பு சீவிவிட்டது போல் அமைந்தது. முன்னாள் வீரர்களும் அப்ரிதியை கடுமையாக கடிந்து கொண்டனர். இது குறித்து அப்போதே கருத்து தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரே அப்ரிதி கேப்டன் வகிப்பது கடைசியாக இருக்கும் என சூசகமாக தெரிவித்தது.

இதையடுத்து, டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அப்ரிதி நேற்று டுவிட்டரில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் இருக்கும் எனது ரசிகர்களுக்கு இன்று நான் தெரிவிப்பது என்னவென்றால், நான் பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டேன். என் தாய்நாட்டுக்காக, மதிப்புக்காக என்னை விளையாடச் செய்து, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என 3 விதமான போட்டிகளிலும் தலைமைப்பதவி வகித்து சிறப்பாகச் செயல்பட வைத்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கேப்டன் பதவியை துறந்தபோதிலும், தொடர்ந்து அணியில் நீடிப்பேன். என்னை கேப்டனாக தேர்வு செய்த வாரியத்தின் தலைவர் சஹாரியார் கானுக்கு நன்றி என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அப்ரிதி தொடர்ந்து அணியில் நீடிப்பார் என நான் உறுதி அளிக்கமுடியாது என்று சமீபத்தில் வாரியத்தின் தலைவர் சஹாரியார் கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply