- செய்திகள், விளையாட்டு

விராத் ஆட்டம் வீண்; ஹீரோவாக ஜொலித்த சிம்மன்ஸ் ‘கோட்டை விட்டது’ இந்திய அணி

மும்பை, ஏப்.1:-
மும்பை வான்ஹடே அரங்கில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதி ஆட்டத்துக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி முன்னேறியது.

எளிதாக வெற்றி பெற வேண்டிய சூழலில், திறனற்ற பந்துவீச்சால் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டனர் இந்திய அணியினர். கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சிம்மன்ஸ், சார்லஸ்,  ரஷெல் ஆகியோரின் அனல் பறக்கும் பேட்டிங்  தவிடு பொடியாக்கியது. அதேசமயம், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராத் கோலியின் ஒட்டுமொத்த ஆட்டமும் வீணாய் போனது.

டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சாமே பீல்டிங்கை தேர்வு செய்தார்.
ரோகித் சர்மா, ரகானே ஆட்டத்தைத் தொடங்கினார். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 43 ரன்களில்(31 பந்து, 3பவுண்டரி, 3சிக்சர்) பத்ரியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து பதற்றத்துடன் களமிறங்கிய கோலி இருமுறை ‘ரன் அவுட்டில்’ இருந்து தப்பினார். ரகானே 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு வந்த தோனி ஒருபக்கம் நிதானம் காட்ட, தனது பேட்டால் ‘ருத்ர தாண்டவம்’ ஆடிய கோலி 33 பந்துகளில் அரைசதம் எட்டினார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்ததது. கோலி 89 ரன்களுடனும், (47பந்து,11பவுண்டரி, 1 சிக்சர்), தோனி 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஓவருக்கு 10 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கியந்தியத்தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 196 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. தொடக்கத்திலேயே கெயில்(5), சாமுவேல்ஸ்(8) ஆகியோரை பும்ராவும், நெஹ்ராவும் வெளியேற்றியதால் ஓரளவுக்கு வெற்றி குறித்த நம்பிக்கை இருந்தது.

ஆனால், சார்லஸ், சிம்மன்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தை பார்த்த போது, மொத்தமும் சிதறியது. சார்லஸ் 30 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்னில்(36பந்து, 2சிக்சர்,7பவுண்டரி) ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர். 4-வது விக்கெட்டுக்கு ஜோடியான சிம்மன்ஸ், ரஷெல் வெறித்தனமாக பேட்டை சுழற்றி இந்திய வீரர்களின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்து விட்டனர். சிம்மன்ஸ் 35 பந்தில் அரைசதம் அடித்தார். சிம்மன்ஸ் 82(51பந்து, 7பவுண்டரி, 5 சிக்சர்), ரஷெல் 42 ரன்களுடன்(20பந்து, 3பவுண்டரி, 4 சிக்சர்)இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெறச் செய்தனர். ஆட்டநாயகன் விருதை சிம்மன்ஸ் பெற்றார்.

வரும் 3-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது மேற்கிந்தியத்தீவுகள்அணி.

Leave a Reply