- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

வியாபாரிகளிடம் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த பணத்ைத தராவிட்டால் தமிழகம் தழுவிய கடையடைப்பு விக்கிரமராஜா அறிவிப்பு…

திருச்சி, ஏப்.13-
தேர்தல் நடவடிக்கை வாகன சோதனையின் போது வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த பணத்தைத் திரும்பத் தராவிட்டால் தமிழகம் தழுவிய கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி வெஸ்டரி பள்ளி ரவுண்டானாவில் நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் தேர்தல் கமிஷனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்து பேசியதாவது.
வணிகம் பாதிப்பு
கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தேர்தல் ஆணையத்தால் 700-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது, இதுவரை 18 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பான்மையான பணம் மற்றும் பொருட்கள் வணிகர்களுடையது. இதனால், தமிழகம் முழுவதும் 30 சதவீதம் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 800 கோடி வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் 50 சதவீத வணிகம் பாதிக்கப்படும்.
போராட்டம்
ஆகவே, தேர்தல் ஆணையம் வணிகர்கள் ஆவணங்கள் இன்றி 3 லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். வணிகர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் பொருட்களை திரும்ப வழங்க வேண்டும். இனியும் இதுகுறித்து உரிய நடவடிக்கை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை எனில், தமிழகம் தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மோகன், மாநில பொருளாளர் கோவிந்தராஜுலு, திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், செயலாளர் செந்தில் உட்பட ஏராளமான  வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply