- உலகச்செய்திகள், செய்திகள்

விமானத்தில் பயணம் செய்யும்போது முஸ்லிம் பெண்ணின் ‘ஹிஜாப்’பை நீக்கிய அமெரிக்க இளைஞருக்கு ஓர் ஆண்டு சிறை?

வாஷிங்டன், மே 16:-

விமானப் பயணத்தின்போது, முஸ்லிம் பெண் அணிந்திருந்த ‘ஹிஜாப்பை’ வலுக்கட்டாயமாக நீக்கிய அமெரிக்க இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிகாகோ நகரில் இருந்து அல்குயர்கியு நகருக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. இந்த விமானத்தில் நார்த் கரோலினா மாநிலம், கேஸ்டோனியா நகரைச் சேர்ந்த கில் பார்கர் பேனே (37வயது) என்ற இளைஞர் பயணம் செய்தார்.

அப்போது, பார்கர் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து சில இருக்கைகளுக்கு முன், முஸ்லிம் பெண் ஒருவர் தலையில் ‘ஹிஜாப்’ அணிந்து அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு சென்ற பார்கர், அந்த பெண்ணிடம், ‘ஹிஜாப்பை அகற்றுங்கள்‘, ‘இது அமெரிக்கா’ என்று கூறி ஹிஜாப்பை அகற்ற வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த பெண் இது மதகோட்பாடுக்கானது என்று கூறி ஹிஜாப்பை அகற்ற மறுத்துவிட்டார். இதையடுத்து, பார்கர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் தலையில் இருந்து ஹிஜாப்பை அகற்றிவிட்டு சென்று அமர்ந்தார்.

மத சுதந்திரத்தை பறிக்கும் விதத்தில் நடந்து கொண்ட பார்க்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் அந்த பெண் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் முஸ்லிம் பெண்ணின் மதச்சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. மேலும், பெண்ணின் ஹிஜாப்பை நீக்கிய பார்கரின் செயல் குற்றத்துக்குரியது என்றும் கூறியது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பார்க்கர் தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளித்தார். அதில், “ அந்தப் பெண்ணின் ஹிஜாப்பை, வலுக்கட்டாயமாக நீக்கினேன். அந்தபெண்ணின் மதநம்பிக்கைக்கு உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே இடையூறு செய்தேன்'' என்று குறிப்பிட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. அந்த இளைஞருக்கு  அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை அல்லது, ரூ.66 லட்சம் வரை அபராதமும் விதிக்க  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், மதரீதியான துன்புறுத்தல்கள் 2014-ம் ஆண்டு 154 சம்பவங்கள் நடந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு 174 ஆக உயர்ந்துள்ளது என ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply