- செய்திகள், மாநிலச்செய்திகள்

விஜய் மல்லையா கடன் விவகாரம் பாடமாகிறது? இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில்

அகமதாபாத், மார்ச் 27:-
விஜய் மல்லையா கடன் விவகாரத்தை மாணவர்களுக்கு பாடமாக்க இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.) அகமதாபாத் பேராசியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தப்பி ஓட்டம்

இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பிரபல தொழில் அதிபரும், மதுபான சக்கரவர்த்தியுமான விஜய் மல்லையா, கிங் பிஷர் விமான நிறுவனம்,  யுனைடெட் பிரிவரீஸ் போன்ற நிறுவனங்களை நிர்வகித்து வந்தார். ஸ்டேட் வங்கி உள்பட பல வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன், வட்டியை அவர்  கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்.

நாடு முழுவதும் விஜய் மல்லையாவின் கடன் விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அரசியல் கட்சிகள் இடையே பெரிய அளவில் வாக்குவாதங்களை ஏற்படுத்தியது. தற்போது இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பைனான்ஸ், அக்கவுண்டிங் பிரிவு முதுநிலை மாணவர்களுக்கு மல்லையாவின் கடன் விவகாரத்தை கல்வி பாடமாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கலந்தாய்வு

தற்போது கல்வி நிறுவனத்தின் வகுப்பறையில் மாணவர்கள் விஜய் மல்லையாவின் கடன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மல்லையா போன்ற வழக்குகளில் பங்குதாரர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஐ.ஐ.எம். அகமதாபாத் மட்டுமல்ல, ஐ.ஐ.எம். லக்னோ, ஐ.ஐ.எம். இந்தூர், ஐ.ஐ.எம். பெங்களூரு உள்பட பல ஐ.ஐ.எம்.கள் விஜய் மல்லையா கடன் விவகாரத்தை பாடமாக்க ஆர்வத்துடன் உள்ளன. இதற்கு முன்பு சத்தியம் ராமலிங்க ராஜூவின் தில்லு முல்லு வெளியான போது பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பாடமாக்க ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதே ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு விஜய் மல்லையாவை விரும்பி அழைத்தனர் என்பது குறிப்பிடததக்கது.

Leave a Reply