- செய்திகள், மாவட்டச்செய்திகள்

விஜயகாந்த் வேண்டாம்… வாசன் போதும்! தி.மு.க.,வில் திடீர் திருப்பம்?

தி.மு.க., கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க வேண்டாம் என்று திடீர் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது. தே.மு.தி.க.,வின் கூட்டணிக்காக காத்திருப்பதை விட ஜி.கே.வாசனை கூட்டணியில் சேர்த்து தேர்தலை சந்திக்கலாம் என்று தலைமைக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்தி வருவதாக அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., கூட்டணிக்கு விஜயகாந்த் வரவேண்டும் என்று கருணாநிதி அழைப்பு கொடுத்தார். ஆனால் பா.ஜ.க., தலைவர்களை சந்திப்பதிலும், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்திப்பதிலும் விஜயகாந்த் ஆர்வமாக  இருந்தாரே தவிர, தி.மு.க.,வின் அழைப்பை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடந்த மாநாட்டில், அவரது மனைவி பிரேமலதா வழக்கம்போல் தி.மு.க.,வை தாக்கிப் பேசினார்.  இருப்பினும், கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தி.மு.க.,வில் அவர் இணைய வாய்ப்புண்டு என்று தி.மு.க., தலைமை பொறுமை காத்தது.

இந்நிலையில், கூட்டணி குறித்து பேசி முடிக்க டெல்லியிலிருந்து மத்திய பா.ஜ.க., அமைச்சர் ஜவடேகர் வருகை தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் சில சிறு கட்சிகளை சந்தித்ததுடன், விஜயகாந்தையும் சந்தித்து பேசினார். இதனால் கடும் அதிருப்தியான தி.மு.க., தரப்பு, விஜயகாந்துக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக சுப.வீரபாண்டியனை வைத்து அறிக்கை வெளியிட்டதாக தகவல் வெளியானது.
கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான சுப. வீரபாண்டியன், ‘‘விஜயகாந்த் கட்சிக்கு 5 சதவீதமே வாக்கு வங்கி உள்ளது. அவரது கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்காக காத்திருப்பது அநாகரிகமானது. இதற்குப் பதில் தி.மு.க.,வே 200 இடங்களில் போட்டியிடலாம்’’ என்ற ரீதியில் தி.மு.க.,வினரின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக, அவரது வலைதளத்தில் கருத்தை வெளியிட்டார்.

இந்த அறிக்கை தே.மு.தி.க., வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக, மத்திய அமைச்சரை சந்தித்தது, சம்பிராதயாமான சந்திப்புதான் என்று தே.மு.தி.க., தரப்பில் அறிக்கை வெளியிடப் பட்டது. இதனால், சமாதானமடைந்த சுபவீ, இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்தால், இரு கட்சிகளுக்கும் நல்லது என்று மறு அறிக்கை வெளியிட்டார். ஆக மீண்டும் இரண்டு தரப்பும் சமாதானமாகி விட்டது என்று கருதிய நிலையில், இப்போது தி.மு.க., தரப்பிற்கு மாற்று யோசனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க., கூட்டணியில் இணைவதற்கு பெரிய அளவில் எதிர்பார்க்கும் விஜயகாந்தின் அணுகுமுறை, தி.மு.க., தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்தால் ஏற்படும் சாதக பாதகங்களை அலசிப் பார்த்த நிலையில், இப்போதைய நிலையில் அவரை கூட்டணியில் சேர்ப்பதால், பெரிய அளவில் லாபமில்லை என்றும், அதற்குப் பதிலாக ஜி.கே.வாசனை கூட்டணியில் சேர்த்து, தேர்தலை சந்திக்கலாம் என்றும் பலரும் கூறியுள்ளனராம்.

ஏற்கனவே  காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. அத்துடன் வாசனும் இணைந்தால், பழைய காங்கிரஸ் வாக்கு வங்கி உறுதியாகும், மேலும் சில சிறு கட்சிகளையும் சேர்த்து, மதச்சார்பற்ற அணியை உருவாக்குவதே சிறந்தது என்ற ரீதியில் கூட்டல் கழித்தல் கணக்குகளை கூறி, தலைமைக்கு தகுந்த ஆலோசனை கூறியுள்ளனராம். இந்த ஆலோசனைகளை தலைமைக்கு மிக நெருக்கமான அமைப்பின் தலைவர்கள் மூலம் தெரியப்படுத்தி, தலைமையை சம்மதிக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக, இன்னும் சில தினங்களில், விஜயகாந்த் இல்லாத மதச்சார்பற்ற கூட்டணி உருவாகும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

Leave a Reply