- செய்திகள்

விஜயகாந்த் கூட்டணியின் மூன்றாவது தேர்தல் அறிக்கை!

 

‘‘தென் மாவட்ட வேட்பாளர்கள் தெம்பா இருக்காங்களாங்கோ…’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை தொடங்கி வைத்தார் நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘யாரைப் பத்தி சொல்ற பா…?’’ என்று கேட்டார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘தி.மு.க. கூட்டணியில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கின 41 தொகுதிகள்ல, பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகள், தென் மாவட்டங்கள்ல இருக்கு… ‘மற்ற மாவட்டங்களை விட, தென் மாவட்டங்கள்ல காங்கிரஸ் கட்சிக்கு பாரம்பரிய ஓட்டு வங்கி இருக்கு…
‘‘இந்த ஓட்டு வங்கி பலத்தோட, தி.மு.க அல்லது அ.தி.மு.க.வோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும்போது, கூட்டணி வலுவும் சேர்ந்து, வெற்றி வசமாகிடும்’ன்னு கடந்த கால தேர்தல் புள்ளிவிவரங்களை சொல்லி, தென் மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தெம்பா உலா வர்றாங்களாங்கோ…
‘‘அதேநேரம், வட மாவட்டங்கள்ல காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள், ‘பா.ம.க.வின் ஓட்டு வங்கி, சிக்கலை ஏற்படுத்தலாம்’னு கவலையில இருக்காங்களாம்… இதனால காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் தமிழகம் வரும்போது வட மாவட்டங்கள்ல பிரச்சாரம் செய்யணும்னு கோரிக்கை வைச்சிருக்காங்களாம்…’’ என்று தகவலை சுருக்கமாக முடித்தார் நிருபர் அழகுமணி.

‘‘அனுதாபிகள் மத்தியில குழப்பம் ஏற்பட்டிருக்கு பா…’’ என்று அடுத்து பேச ஆரம்பித்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘யாரைப் பத்தி சொல்லுதீரு…?’’ என்று கேட்டார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘இனி இளைஞர்கள்தான் நாட்டை வழிநடத்தப் போறாங்க… எனக்கு ஓய்வு கொடுங்க’ன்னு தி.மு.க. தலைவர் கருணாநிதி, தஞ்சாவூர்ல பேசினது, அந்தக் கட்சியினர் மத்தியில அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்காம் பா…
‘‘ஒரு கட்டத்துல, தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரா ஸ்டாலினை முன்னிறுத்தனும்னு கட்சியில குரல் எழுந்துச்சு… இதனால ஏற்பட்ட குழப்பங்களுக்கு, ‘தி.மு.க. வெற்றி பெற்று, கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார்’னு சொல்லி, முற்றுப்புள்ளி வைச்சார், மு.க.ஸ்டாலின்…
‘‘இப்பவும் பிரசாரக் களத்துல, ஜெயலலிதாவா அல்லது கருணாநிதியான்னு தான் விவாதிக்கிறாங்கன்னு அரசியல் விமர்சகர்கள் சொல்றாறாங்க… இந்த நிலைமையில, போட்டியில இருந்து விலகுற தோற்றத்தை, ஓய்வைப் பத்தின கருணாநிதி பேச்சு ஏற்படுத்திடுச்சுன்னு, தி.மு.க.வினர் விசனப்படுறாங்களாம் பா…
‘‘அதோட, கருணாநிதிக்காக தி.மு.க.வுக்கு ஓட்டு போடுற அந்தக் கட்சியோட அனுதாபிகள் மத்தியில, ‘அடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தா, முதல்வரா கருணாநிதி பொறுப்பேற்பாரா’ன்னு குழப்பமும் ஏற்பட்டிருக்கு… ‘அவரோட ஒரு நாள் பேச்சை வைச்சு எந்த முடிவுக்கும் வர முடியாது… தொடர்ந்து பிரச்சாரத்துல அவர் பேசுறதை கவனிக்க வேண்டியிருக்கு’ன்னு அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்க பா…’’ என்று தகவலை முடித்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.

‘‘இன்னொரு தேர்தல் அறிக்கையை இன்றைக்கு வெளியிடுறாங்க வே…’’ என்று அடுத்து பேச ஆரம்பித்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘எந்தக் கட்சி விவகாரம் சார்…?’’ என்று கேட்டார் நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கையை, மார்ச் மாதமே விஜயகாந்த் வெளியிட்டுட்டார்… அந்த தேர்தல் அறிக்கையை, வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க, அவங்க கவனம் செலுத்துறதா தெரியலை… தே.மு.தி.க. தேர்தல் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிரச்சாரக் கூட்டங்கள்ல விஜயகாந்தே  பேசுறதில்ல…
‘‘அடுத்து, த.மா.கா. தலைவர் வாசன், ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்… இந்த கூட்டணியில மூன்றாவதா, மக்கள் நலக் கூட்டணி சார்பா இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுறாங்க வே…
‘‘த.மா.கா. மக்கள் நலக் கூட்டணி இவங்க தனித்தனியா தேர்தல் அறிக்கை வெளியிட்டாலும், இவங்க கூட்டணி, ஆட்சியைப் பிடிச்சா, முதல்வர் ஆகப் போகிற விஜயகாந்தான், அதை நிறைவேத்தணும்… ஆனா, அவரிடம் ஆலோசனை கூட நடத்தாம, தனித்தனியா தேர்தல் அறிக்கை வெளியிடுறாங்க’ன்னு, தே.மு.தி.க.வுல அதிருப்தி தெரிவிக்கிறதா சொல்லுதாவ…
‘‘இலங்கைத் தமிழர், கூடங்குளம் அணுமின் நிலையம், முல்லை பெரியாறு இந்த முக்கிய பிரச்சினைகள்ல இடதுசாரிகளுக்கும், ம.தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கும் முரண்பாடான நிலைப்பாடு இருக்கு… அதனால எந்தக் கட்சியோட நிலைப்பாடு, இன்று வெளியிடப்படுற தேர்தல் அறிக்கையில, தேர்தல் வாக்குறுதியா இடம்பிடிக்கும்னு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கு வே…’’ என்று கூறி, பிரஸ் கிளப்பில் விவாதத்தை நிறைவு செய்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.*

Leave a Reply