- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

விஜயகாந்துடன் பாரதிய ஜனதா பேச்சுவார்த்தை கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்கபப்டும்

சென்னை, பிப். 29-

தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- தே.மு.தி.க. கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என்று சென்னையில் விஜயகாந்தை சந்தித்த பின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

2014-ம் ஆண்டு கூட்டணி

கடந்த 2014-–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனியாக போட்டியிடுவதாக அறிவித்து, அதன் முதல்–-அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை முன்னிறுத்தி உள்ளது. ம.தி.மு.க. மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

தே.மு.தி.க. இந்த தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதை கடந்த 20-–ந் தேதி காஞ்சீபுரத்தில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அந்த மாநாட்டில் விஜயகாந்த் எவ்வித முடிவையும் தெரிவிக்காமல், கிங்கா இருக்கனுமா? கிங் மேக்கரா இருக்கனுமா? என்ற கேள்வியை தொண்டர்கள் மத்தியில் கேட்டுவிட்டு, எவ்வித பதிலையும் தெளிவாக கூறாமல் மதில் மேல் பூனையாகவே இருந்து வருகிறார்.

விஜயகாந்துடன் சந்திப்பு

இந்நிலையில் சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்தது. அப்போது இருவரும் மனம்விட்டு பேசியதாக தெரிகிறது.

சந்திப்புக்கு பின்னர்  ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீண்டும் பேச்சுவார்த்ைத

விஜயகாந்தை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி அடைகின்றேன், விஜயகாந்த் உடனான சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது, பயனுள்ளதாக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியதில் மகிழ்ச்சியாகும். விஜயகாந்துடன் நடத்திய ஆலோசனைகள் குறித்து டெல்லியில் பாரதிய ஜனதா தலைமை மற்றும் பிரதமர் மோடியிடம் விவரிக்கப்படும். பிற கூட்டணி கட்சிகளுடனும் ஆலோசிக்கப்படும். டெல்லி சென்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தமிழகம் வருவேன். கூட்டணி தொடர்பான முடிவு அடுத்த வாரத்தில் தெரிவிப்பேன்.
ஆட்சி மாற்றம்

கூட்டணி தொடர்பான இறுதியான முடிவை விஜய்காந்த் எங்களிடம் தெரிவிக்கவில்லை. தமிழகத்திற்கு அனைத்து வகையிலும் மோடி தலைமையிலான மத்திய அரசு உதவி செய்து வருகிறது.  தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பணம் மத்திய அரசு வழங்கியது. ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படுவதும் மத்திய அரசின் நிதிஉதவியினால் தான்.

மத்தியில் மோடி தலைமையிலான சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது, அதுபோல் தமிழகத்திலும் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சிகள் மாறிஉள்ளது, ஆனால் காட்சிகள் மாறவில்லை, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியானது. சரியான நேரத்தில் மீண்டும் சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply