- சினிமா, செய்திகள்

வாலிபராஜா விமர்சனம் பார்த்த காதல் கதைகளில் இதுவரை பார்க்காத காதல் இந்த `வாலிபராஜா

 

ஊட்டியில் நஷ்ரத்தை சந்திக்கும் சேது, கண்டதும் காதல் கொள்கிறான். ஆனால் நஷ்ரத்தோ சேதுவிடம்  நட்பு மட்டுமே பாராட்டுகிறாள். நட்பை காதலாக்க சேது முயன்றும் அது நடவாமல் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் சேதுவுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்கிறார்கள். பெண் வீட்டில் விசாகாவை தனியாக சந்தித்து பேசும் சேது, நஷ்ரத் மீதான தன் காதலை சொல்லி, நீ தான் நமது திருமண ஏற்பாட்டை நிறுத்த வேண்டுமன்று கேட்டுக்கொள்கிறான். அதற்கு சம்மதிக்கும் விசாகாவும் திருமணத்தை நிறுத்துகிறாள். ஆனாலும் சில பல தற்செயல் சந்திப்பில் சேது மீது காதலாகிறாள், விசாகா. சேதுவும் தான். இந்த நேரத்தில் நஷ்ரத், சேதுவை அழைத்து `ஐ லவ் யூ' சொல்ல, சேதுவின் நிலையில் இன்னும் சிக்கல். வாழ்க்கைத் துணையாக அவன் யாரை தேர்ந்தெடுக்கிறான் என்பதை நகைச்சுவை பின்னணியில் சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.

`கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக வந்த சேது, இதில் தனி ஹீரோவாக ஆச்சரியப்படுத்துகிறார். நஷ்ரத்தை காதல் நோக்கத்தில் துரத்தி துரத்தி நட்புக்கு பாத்திரமாகும் இடங்களில் அந்த நட்பான நடிப்பு அத்தனை இயல்பு. விசாகாவின் கையை பற்றிய மாத்திரத்தில் காதல் எட்டிப் பார்க்கும் இடத்திலும் அந்தக் காதலை அழகாக ரசிகனுக்குள் கடத்தி விடுகிற நடிப்பு. டாக்டர் சந்தானம் அவரை ஆழ்நிலை தியானத்துக்

குள் கொண்டு போய் கேள்வி கேட்க, அடுத்த கணமே `கூப்பிட்டீங்களா டாக்டர்' என்று கேட்டபடி எழ முயலும் காட்சியில்  தியேட்டரில் ஆரவாரம் அடங்க நேரமாகிறது.

சேதுவின் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் மனோதத்துவ டாக்டராக சந்தானம் வரும் காட்சிகளில் சிரிப்பு சிதறுகிறது, சில்லரையாய்.

நாயகிகளாக வரும் விசாகாசிங், நஷ்ரத் இருவருமே அழகில் வசீகரிக்கிறார்கள். விசாகாசிங்கிடம் கூடுதலாக நடிப்பும் அழகு பெறுகிறது. திருமணம் நின்று போனபிறகு சேது வீட்டில் நஷ்ரத்தை சந்திக்கும் காட்சியில் தேர்ந்த நடிப்பு.

சுப்பு பஞ்சு-தேவதர்ஷினி ஜோடி அவ்வப்போது கலகலக்க வைக்கிறார்கள். இதில் நஷ்ரத்தின் அப்பா வி.டி.வி கணேஷ் தனிஆவர்த்தனம்.

மகனின் காதல் சிக்கல் தெரிந்த பிறகு காரில் இருந்து இறக்கி அட்வைஸ் பண்ணி விட்டு அங்கேயே விட்டுப் போகும் இடத்தில் அப்பா ஜெயப்பிரகாஷின் நடிப்பில் மெர்க்குரிப் பிரகாசம்.

தரன் இசையில் பாடல்கள் கேட்கலாம் ரகம். லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவு காட்சிகளை மனதுக்குள் கடத்துகிறது. `இரண்டு பெண்கள் வாழ்க்கைக்குள் ஒரு இளைஞன்' என்ற வழக்கமான காதல் கதையை எடுத்துக் கொண்டு தனக்கே உரிய ஸ்பெஷல் டச்சில் வித்தியாசம் காட்டி ஜெயித்திருக்கிறார், இயக்குனர் சாய்கோகுல் ராம்நாத்.

Leave a Reply