- செய்திகள், விளையாட்டு

வாண வேடிக்கையுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது தெற்காசிய விளையாட்டு

 

கவுகாத்தி, பிப்.17:-

தெற்காசிய விளையாட்டுப் போட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கையுடன் இனிதே நிறைவு பெற்றது.

12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி கடந்த 5-ம் தேதி தொடங்கியது. 12 நாள்களாக நடந்துவந்த இந்தப் போட்டி நேற்று வாணவேடிக்கையுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் வட-கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும், நடனங்களும் இடம் பெற்றன.

முன்னதாக வட-கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 8 பேண்ட் வாத்தியங்களுடன் நிறைவு விழா தொடங்கியது. இதையொட்டி வட-கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற கோலாகலமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் போட்டியை முடித்து வைப்பதாக அறிவித்தார்.

அசாம் முதலமைச்சர் தருண் கோகாய், மேகலாய மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெனித் எம். சங்மா, இந்திய ஒலிம்பிக் சங்க உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 16 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் தெற்காசியாவைச் சேர்ந்த 8 நாடுகளின் 2500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் தெற்காசிய ஒலிம்பிக் கமிட்டியின் கொடி கீழ் இறக்கப்பட்டு அடுத்த ஒலிம்பிக் போட்டி நடைபெற நேபாள நாட்டின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக இந்தக் கொடியை மத்திய அமைச்சர் சோனாவால் தெற்காசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தார். அவர் 13-வது தெற்காசிய ஒலிம்பிக் போட்டியின் தலைவரும் நேபாள ஒலிம்பிக் கமிட்டியின் தலைவருமான ஜீவன் ராம் ஸ்ரேஸ்தாவிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் நேபாள விளையாட்டுத் துறை அமைச்சர் சத்தியநாராயண் மண்டலும் கலந்து கொண்டார். இந்தப் போட்டியை அசாம், மேகலாயம் இணைந்து நடத்தின.

முன்னதாக தெற்காசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவில் 1987-ம் ஆண்டு கொல்கத்தாவிலும் சென்னையில் 1995-ம் ஆண்டும் நடந்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணி இதுவரை இல்லாத அளவுக்கு 308 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி இரண்டாம் இடமும் பாகிஸ்தான் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.

கடந்த 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் கோலகலமாக தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நேற்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது.

Leave a Reply