- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி 18-ந் தேதி வரை நடைபெறும்

சென்னை, பிப்.16-

‘வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர், ஒரே பெயர் பல இடங்களில்  இடம்பெற்றுள்ளது போன்றவற்றை சரிபார்க்கும் பணி 16-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெறும். நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயர் பட்டியல் 20-ந் தேதி வெளியிடப்படும்’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு முகாம்கள்
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ந் தேதி தமிழகத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரே பெயர் பல இடங்களில் பதிவு, இறந்தவர்கள் பெயர் பதிவு ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதற்காக, வரும் 15-ந் தேதி (இன்று) முதல், 29-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலை மேம்படுத்துவதற்கான சிறப்பு முகாம்களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த பணியில் பூத் அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் பல இடங்களில் இருக்கிறதா? என்பதை சரிபார்க்கின்றனர். இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்கின்றனர்.
சரிபார்ப்பு பணி
இதன்படி, இறந்தவர்கள், ஒரு வாக்காளர் அடையாள அட்டை எண் வாக்காளர் பட்டியலில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளது, ஒரே பெயர் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது ஆகியவற்றை கண்டறிதல் மற்றும் அரசியல் கட்சியினர் தரும் மனுக்களை பெற்றுக் கொள்ளுதல் ஆகிய பணிகள் 16-ந் தேதி மேற்கொள்ளப்படும்.
17-ந் தேதி பூத் அலுவலர்கள் சரிபார்ப்பு பணியை தொடங்கி, 18-ந் தேதி நிறைவு செய்வார்கள். அரசியல் கட்சியினர் அளித்த மனுக்கள் மீதான விசாரணை முடிவுகளை 19-ந் தேதி அவர்களிடம் வழங்குவார்கள். சரிபார்ப்புக்கு பிறகு நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்கள் பட்டியல் மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் 20-ந் தேதி வெளியிடப்படும்.
ஆய்வு

22-ந் தேதி நடைபெறும் கிராம சபா கூட்டங்ளில், நீக்கப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல் ஆய்வு செய்யப்படும். இதற்குப் பிறகு, போலி வாக்காளர்களை நீக்கும் பணி 28-ந் தேதி வரை நடைபெறும்.
ஒரே பெயர் பல இடத்தில் இருப்பது, ஒரு வாக்காளர் அடையாள அட்டை எண் வாக்காளர் பட்டியலில் பல இடத்தில் இருப்பது ஆகியவை குறித்து வாக்காளர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்கலாம். இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்கு, அவர்களின் உறவினர்கள் விண்ணப்பம்-7யை பயன்படுத்தலாம். http://elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் பூத் அலுவலர்கள், உதவி வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரி, வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரி ஆகியோது செல்போன் எண்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply