- செய்திகள்

வறட்சி பகுதிகளில் நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை…

சென்னை,ஆக.25-

வறட்சி பகுதிகளில் நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அதிர்ச்சி
நாடு முழுவதும் மத்திய நீர்வளத்துறை ஆணையம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின் படி தமிழகத்தில் நீர்வளம் வெகுவாக குறைந்து வருவதாகவும், வறட்சி ஏற்படும் நிலை உருவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர்வள கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் போதிய மழையின்மை, காவிரி நீர் கிடைக்காதது, கடும் மழை, இயற்கை சீற்றம் போன்றவற்றால் விவசாயம் நலிவடைந்து வருகின்றது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து விவசாயக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இச்சூழலில் தற்போது மத்திய நீர்வள கமிஷனின் எச்சரிக்கை தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்முனை மின்சாரம்…
தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்கனவே குறுவை சாகுபடி நடைபெறாமல் போனது. எனவே தமிழக அரசு சம்பா சாகுபடிக்கு காவிரியிலிருந்து உரிய நீரைப் பெற்றுத்தர வேண்டும். அதே நேரத்தில் வறட்சி ஏற்படும் என அறிவித்துள்ள மாவட்டங்களில் ஆழ்துளை கிணறுகள் ஏற்படுத்தி கொடுக்கவும், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

மேலும் வறட்சி ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டுமல்லாமல் தமிழகம் ழுழுவதும் உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் போன்ற அனைத்து நீர் நிலைப்பகுதிகளிலும் முறையாக தூர் வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கரையை உயர்த்தி நீர் ஆதாரத்தை சேமித்து, பாதுகாக்க வேண்டும்.
தற்போது தமிழகத்தில் வறட்சி ஏற்படும் என மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவித்துள்ளதால், அப்பகுதிகளில் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும், நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்துவதற்கும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அதிகநிதி ஒதுக்கி தர வேண்டும்.

இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply