- செய்திகள், தேசியச்செய்திகள், வணிகம்

(வர்த்தகம்) நீடிக்குமா காளையின் ஆதிக்கம்? இந்த வார பங்கு வர்த்தகத்தில்…

புதுடெல்லி, டிச.21:-
சென்ற வாரத்தில் நம் நாட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது. இந்த நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும் என நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

4 தினங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை  விடுமுறை என்பதால் இந்த வாரத்தில் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். ஜி.எஸ்.டி. மசோதா, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்டவை குறுகிய கால அடிப்படையில் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் 3 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவதற்கு எதிர்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே இந்த கூட்டத்தொடரில் இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றுவது கடினம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தடை நீக்கம்
கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு 40 ஆண்டுகளாக இருந்த தடையை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது அமலுக்கு வந்தால் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும். இதனால் இந்த நாடுகள் கச்சா எண்ணெய்க்கு அரபு நாடுகளை சார்ந்து இருப்பது குறையும். எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் நம் நாட்டு பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும் என தெரிகிறது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை அண்மையில் உயர்த்தியது. இதனையடுத்து நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர். இந்த வாரமும் இது தொடர்ந்தால் பங்கு வர்த்தகத்தில் ெதாய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

ரூபாய் மதிப்பு

இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இதர உள்நாட்டு, சர்வதேச நிலவரங்களும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 25,519.22 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 7,761.95 புள்ளிகளிலும் முடிவுற்றன.

Leave a Reply