- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

வரும் 3-ந்தேதி நடக்கிறது மயிலை கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்

சென்னை, ஏப். 1-
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
7-வது நூற்றாண்டு கோவில்
‘கயிலையே மயிலை’ ‘மயிலையே கயிலை’ என்ற புகழுக்குரிய மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில்,  7-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு நடக்கிறது.

ரூ.9 கோடியில் திருப்பணி
கும்பாபிஷேகத்தை முள்னிட்டு பல்வேறு திருப்பணிகள் ரூ.9 கோடி செலவில் நடந்தன. 6 மாத காலத்துக்கு மேல் தொடர்ந்து நடந்து வந்த பணிகள் தற்போது நிறைவடையும் நிலையை எட்டி உள்ளது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு, கிழக்கு ராஜகோபுரத்தில் 9 கலசங்கள், மேற்கு கோபுரம் 7 கலசங்கள் மற்றும் இதர கலசங்கள் 19 என 36 கலசங்களுக்கு தங்கநீர் தோய்த்து முடிக்கப்பட்டது.
ஒரு பெரிய தேர், 4 சிறிய தேர்கள், அறுபத்து மூவர் பல்லக்குகள் என அனைத்து வாகனங்களும் பழுது நீக்கி புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு உள்ளன. கபாலீஸ்வரருக்கு 4 கிலோ தங்க நாகாபரணமும், கற்பகாம்பாள் பாவாடைக்கு 2 கிலோ தங்கமும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கோவில் தெப்பக்குளத்தின் நீர் மறு சுழற்சி மூலம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

யாகசாலை பூஜை

கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது.
ஆகம விதிகள் படி யாக பூஜைகளை வேதவாத்தியார் பிரம்ம னிவாச சாஸ்திரிகள் தலைமையில், 120 சிவாச்சாரியார்கள் மேற்கொண்டுள்ளனர்.
பக்தர்கள் நலன்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை(சனிக்கிழமை) காலை 6 மணிக்கு விசேஷ சாந்தி கும்ப திருமஞ்சனமும், தீர்த்த வினியோகமும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 3-ந்தேதி காலை 7.45 மணிக்கு கபாலீஸ்வரர் கும்பத்துடன் சன்னதியில் எழுந்தருளல் நடக்கிறது. காலை 8.30 மணி முதல் 9.50 மணிக்குள் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர், விநாயகர், உள்பட அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷோக விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரி த.காவேரி ஆகியோர் செய்துள்ளனர்.

Leave a Reply