- செய்திகள்

வருமானம் இல்லாமல் பரிசல் ஓட்டிகள் தவிப்பு ஒகேனக்கல்லில் 11-வது நாளாக தடை…

தர்மபுரி, ஜூலை 27-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த போதும், பரிசல்களை இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்த தடை 11 நாட்களாக நீடிப்பதால் வருவாயின்றி பரிசல் ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

நீர் வரத்து அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, இரு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

11-வது நாளாக தடை

இந்தநிலையில் நேற்று தண்ணீர் வரத்து 5,450 கன அடியாக குறைந்தது. ஆனாலும் ஐந்தருவி, மெயின் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர் வரத்து குறைந்த நிலையிலும், நேற்று 11-வது நாளாக பரிசல்களை இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

வருமானம் இல்லை

இது குறித்து பரிசல் ஓட்டிகள் கூறியதாவது:-
நேற்று முன்தினம் வினாடிக்கு 5,470 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 5,450 கன அடியாக குறைந்தது. இதனால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்துள்ளது. கடந்த 11 நாட்களாக  பரிசல் இயங்கவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். எனவே, எங்களது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தடையை விலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply