- செய்திகள், விளையாட்டு

வரலாறு படைத்தது மேற்கிந்தியத்தீவுகள் மகளிர் அணி 3-முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி

கொல்கத்தா, ஏப். 4:-

2016-ம் ஆண்டு டி20 மகளிர் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக மேற்கிந்தியத்தீவுகள் அணி வென்று புதிய வரலாறு படைத்தது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு மற்றும் 3-முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து டெய்லர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணி மகுடம் சூடியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக விலானி(52), கேப்டன் லேனிங்(52) ரன்கள் சேர்த்தனர். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 77 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் டாட்டின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

149 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை  அடைந்து வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஹேலே மாத்யூஸ் 66(45பந்து), கேப்டன் டெய்லர் 59(57பந்து) ரன்களுடன் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 120 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த டாட்டின் 18 ரன்களுடன், கூப்பர் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து, அணியை வெற்றிபெற வைத்தனர். ஆட்டநாயகி ஆக மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வீராங்கனை மேத்யூசும், தொடர் நாயகியாக ேகப்டன் டெய்லரும் தேர்வு செய்யப்பட்டனர்.

உற்சாகம்….

முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றவுடன் மேற்கிந்தியத்தீவுகள் மகளிர் அணியினர் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து, நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக ஆடவர் அணியின் கேப்டன் டேரன்சாமே, பயிற்சியாளர் கர்ட்லி அம்புரோஸ், ருஷெல் வந்து மகளிர் அணியினரை வாழ்த்தினர்.

அதுமட்டுமல்லாமல் ஆல்ரவுண்டர் டேவ்னே பிராவோவுடன், மகளிர் அணியினர் நடனமாடி தங்கள் எல்லையில்லை மகழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply