- கடலூர், செய்திகள், மாநிலச்செய்திகள்

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு சிறை

கடலூர், ஏப். 5-
வரதட்சணை கொடுமை தாங்கமாட்டாமல், காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
வரதட்சணை கொடுமை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிளியனூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் அனிதா(வயது 20). சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் காலனியை சேர்ந்த எலக்ட்ரீசியன் பாண்டியனும் (24) காதலித்து, கடந்த 30-4-2009 அன்று சிதம்பரம் தில்லைகாளிக்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ஆன 3 மாதங்களில்   வரதட்சணையாக ரூ. 10 ஆயிரம் வாங்கி வருமாறு, மனைவி அனிதாவை, பாண்டியன் அவரது  தாய் வீட்டுக்கு துரத்தினார்.  மகள் கதறி அழுததை தாங்க முடியாத பெற்றோர், 10ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினர். ஆனால் அடுத்த மாதமே, ஆடிப்பெருக்கு விழாவுக்கு ஒரு பவுன் தங்கநகையும், மோட்டார் சைக்கிளும் வாங்கி வருமாறு கூறி, அனிதாவை பாண்டியன் சித்ரவதை செய்தார்.
தகவல் அறிந்த அனிதாவின் தந்தை, ஆடிப்பெருக்கிற்கு சீர்வரிசைகள் கொண்டுவந்து தந்து விட்டு மாப்பிள்ளை கேட்டவற்றை தீபாவளி சீராக செய்வதாக கூறிவிட்டுச் சென்றார்.
10 ஆண்டு சிறை
இந்த நிலையில், தொடர்ந்து வரதட்சணை கொடுமைக்கு உள்ளான அனிதா, 10-8-2009 அன்று அனிதா தீக்குளித்து இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக,  தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, கிள்ளை காவல்நிலையத்தில் ராமலிங்கம் புகார் கொடுத்தார்.அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பாண்டியனை கைது செய்து, கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பு கூறினார். வரதட்சணை கேட்டு மனைவியின் தற்கொலைக்கு காரணமான பாண்டியனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Leave a Reply