- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா மயிலை தத்தெடுத்தது சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆராய்ச்சித் துறை

செங்கல்பட்டு:பிப்.21-

சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆராய்ச்சித் துறை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விலங்குகளை தத்தெடுத்தது.
தத்தெடுத்து பராமரிப்பு
செங்கல்பட்டை அடுத்துள்ள, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை, பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம், 2009-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து,  கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ம) இயக்குநர் ரெட்டி கூறியதாவது:
பொதுமக்கள்  பூங்கா நிர்வாகத்தில் நேரடியாகப் பங்குகொள்ள முடிவதுடன், விலங்கு இருப்பிடங்கள் பராமரிப்பு, உணவுகளைத் தயார் செய்தல், உணவுகளை விலங்குகளுக்கு வழங்குதல் போன்ற பணிகளை நேரடியாகச் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், நிறுவனங்கள் ஆகியோர் தங்கள் அன்பினை, விலங்குகளிடம் நேரடியாக வெளிப்படுத்துவதற்கும், விலங்குகளைப் பற்றிய தகவல்களை நேரிடையாகத் தெரிந்துகொள்வதற்கும் வழிவகை ஏற்படுகிறது.
பச்சையப்பன் கல்லூரி தத்தெடுப்பு
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இயங்கிவரும், விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு, பவளவிழா அன்மையில் கொண்டாடப்பட்டது. இதனைக் குறிக்கும் வகையில், இத்துறையில் பணியாற்றிவரும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிதி சேகரம் செய்து, விலங்குகள் தத்தெடுப்பிற்காக கேட்பு காசோலையைப் பூங்கா துணை இயக்குநரிடம் நேற்று வழங்கினார்கள்.
இந்த தத்தெடுப்பின் கீழ், இந்திய மயில் ஒன்றுக்கு, ஒரு வருட உணவுக்கான செலவினை, மேற்படி கல்லூரி நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையும், பூங்கா நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் வீரகுமாரி  தலைமையில், விலங்கியல்துறை துணைத்தலைவர் முனைவர் என். சேட்டு, உதவி பேராசிரியர்கள்  எஸ். சங்கீதா,  சத்தியநாராயணன்,  எச். திலகம்,         எல்.பி. சுஜாதா,  என். அகிலா,  பி. மகாலட்சுமி,  ஆர். சக்திகுமரன், பி. ப்ரியா மற்றும் முதுகலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply