- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

வண்டலூர் அருகே 14-ந் தேதி பா.ம.க. மாநாட்டுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை, பிப்.13:-
வண்டலூர் அருகே பா.ம.க. மாநில மாநாடு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாநாடு நடத்த இருக்கும் இடம் பிரச்சினைக்கு உரிய இடமாக இருப்பதால் ரூ.35 லட்சம் டெபாசிட் செய்யும் படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பா.ம.க. மாநில  மாநாடு
சென்னை அருகே உள்ள வண்டலூர்-ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள வி.ஜி.பி. திடலில் வரும் 14-ந் தேதி பா.ம.க. மாநில மாநாடு நடத்த காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து பா.ம.க. துணை பொது செயலாளர் திருகச்சூர் ஆறுமுகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மாநாடு நடத்த அனுமதி வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உள்பட பல அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
அரசு அதிகாரிகள் அப்பீல்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரச்சினைக்கு உரிய இடத்தில் மாநாட்டு பணிகளை நடத்த நேற்று முன்தினம் இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கு ேநற்று மீண்டும் நீதிபதி கே.கே.சசிதரன், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வக்கீல் வாதத்திற்கு பிறகு நீதிபதிகள் நிபந்தனை அடிப்படையில் பா.ம.க. மாநாடு நடத்த அனுமதி வழங்கினர். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது.
இந்த வழக்கில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் வாதாடுகையில், மாநாடு நடத்தும் இடம் அரசுக்கு சொந்தமானது என்றும், விற்பனை ஒப்பந்ததாரர் ஆன வி.ஜி.பி. நிறுவனத்துக்கு மாநாடு நடத்த அனுமதி வழங்கும் உரிமை கிடையாது என்று வாதிட்டார்.
60 சதவீத ஏற்பாடுகள்
பா.ம.க. தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், மாநாட்டுக்காக 60 சதவீதம் ஏற்பாடுகளை செய்து உள்ளோம் என்றும், சாதாரண காரணத்திற்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இந்த இடத்தில் மாநாடு நடத்துவதால்  அரசுக்கோ, வி.ஜி.பி. நிறுவனத்துக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும், இந்த இடத்தை பயன்படுத்த முன்பணம் செலுத்த தயாராக உள்ளோம் என்று அவர் வாதாடுகையில் குறிப்பிட்டார்.

இந்த நிலம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட இடத்தில் மாநாடு நடத்த நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் வி.ஜி.பி. நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இது நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியப்படுத்தி உள்ளது. இந்த நிலம் வில்லங்க நிலமாகத்தான் கருத வேண்டி உள்ளது. எனவே, மாநாட்டுக்கு போலீசார் அனுமதி மறுத்ததை பா.ம.க.வின் அடிப்படை உரிமையை மீறுவதாக கருத முடியாது.

மாநாடு நடத்த அனுமதி
இந்த மாநாட்டை நடத்துவதற்கு அதிகளவில் முன் ஏற்பாடுகளை பா.ம.க. செய்து உள்ளது. இப்போது உள்ள சூழ்நிலையில் அதை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. நீதிபரிபாலனம் வழங்குவதில் சமநிலையை காட்ட வேண்டும். ஆகவே, நிபந்தனை அடிப்படையில் பிரச்சினைக்கு உரிய அந்த இடத்தில் மாநாடு நடத்த அனுமதிக்கிறோம். இதற்காக ரூ.25 லட்சம் தொகையை உயர்நீதிமன்றம் பதிவாளரிடம் இன்று (சனிக்கிழமை ) மதியம் 12-மணிக்குள் டி.டி. எடுத்து வழங்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு
இந்த டெபாசிட் தொகையை செலுத்தியதற்கான ரசீதை காட்டிய பிறகு மாநாடு நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட போலீசார் உத்தரவுகளை பிறப்பிக்கலாம். வி.ஜி.பி. நிறுவனத்தின் தவறான நடவடிக்கைக்காக ரூ. 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. 3 நாட்களுக்குள் வண்டலூர் டி.எஸ்.பி.யிடம் வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்கள்
இந்த தீர்ப்பு நேற்று மாலை 4 மணிக்கு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்கிய பிறகு திருகச்சூர் ஆறுமுகம் சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு நாளைக்குள் மாநாட்டு பணிகளை செய்து முடிப்பது கடினம் என்றும், பாதுகாப்பு ஏற்பாடு, வாகனங்கள் நிறுத்த வசதி போன்றவற்றை எல்லாம் செய்ய வேண்டி இருப்பதால் மாநாட்டை வேறு தேதியில் நடத்த உள்ளோம் என்றும், வரும் 20, 21-ந் தேதிகளில் காஞ்சிபுரம் பகுதிகளில் தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடக்க இருப்பதால் வரும் 27-ந் தேதி மாநாட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
ரூ. 35 லட்சம் டெபாசிட்
இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். மாநாட்டு பந்தல் போன்றவை கூடுதல் நாட்கள் அங்கு பயன்படுத்தப்பட உள்ளதால் ரூ. 25 லட்சம் டெபாசிட் தொகையை ரூ. 35 லட்சமாக உயர்த்துகிறோம் என்றும், இதை 15-ந் தேதி மதியம் 1.30 மணிக்குள் டி.டி.யாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply