- செய்திகள்

வண்டலூரில் அமைய இருந்த புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் சட்டசபையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்…

சென்னை, ஆக.19-
"வண்டலூரில் அமையவிருந்த புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுகிறது" என்று, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
சட்டசபையில் நேற்று மானியக்கோரிக்கை மீதான விவாதத்தற்கு பதிலளித்து வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அந்த துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அவர் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
வணிக வளாகம்
சென்னையில் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் மற்றும் அசோக்நகர் ஆகிய இடங்களில் உள்ள வணிகவளாக கட்டிடங்களை இடித்து விட்டு அதிகபட்ச தரைப்பரப்பு குறியீட்டின்படி நவீன வசதிகளுடன் கூடிய வணிக அலுவலக மற்றும் குடியிருப்பு வளாகங்களை 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும்.
வாடகைக் குடியிருப்பு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகளின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்குடியிருப்புகளை, குடியிருக்க தகுதியுள்ள நிலையில் பராமரிக்க,  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 2016-2017-ம் ஆண்டில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகளில் சிறப்பு பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு  வீட்டுவசதி வாரியத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் வாரியப் பணியாளர்கள் அதிக அளவில் ஓய்வு பெற்றதால், வாரியத் திட்டங்கள் மற்றும் அன்றாடப் பணிகள் தடையின்றி செயல்படுத்தும் நோக்கில் 2016-2017-ம் ஆண்டில் நேரடி நியமனமுறை மூலம் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பமில்லாத பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
கூடுவாஞ்சேரியில்…
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற விண்ணப்பம் சமர்ப்பித்தல், ஒதுக்கீடு செய்தல், வீடு மற்றும் குடியிருப்புகளை ஒப்படைப்பு செய்தல், ஒதுக்கீடு பெற்றதற்கான தொகை, மாத தவணைத் தொகை மற்றும் வாடகைத் தொகையை வசூலிப்பது ஆகியவற்றை நிகழ்நிலை வசதி மூலமாக செய்யவும் மற்றும் வீட்டுவசதி வாரியத்தின் அனைத்துத் திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கீடு ஆகியவற்றிற்கும், மேற்கூறிய இனங்களில் பெறப்படும் தவணைத் தொகை,  வாடகை வசூல் ஆகியவற்றை நாள்தோறும் கண்காணிக்கவும் மற்றும் இவற்றில் தவறு ஏதும் ஏற்படின் அதனை சரிசெய்யவும் வழிவகை செய்யப்படும்.
வண்டலூரில் அமையவிருந்த புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை காரணமாக பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுகிறது. பேருந்து நிலையத்திற்காக வீட்டு வசதித் துறை நிலத்தை போக்குவரத்து துறைக்கு உரிமை மாற்றும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு புதிய அறிவிப்பில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

Leave a Reply