- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

வணிகர்கள் மற்றும் வியாபாரிகளை பாதிக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும்

சென்னை, ஏப்.6-
வணிகர்கள் மற்றும் வியாபாரிகளை பாதிக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தை மத்திய அரசு திரும்ப பெற செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தங்கம் மீதான கலால் வரியை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர்  சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்து, தங்கத்தின் மீதான கலால் வரியை திரும்ப பெற வேண்டும்  என கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் கறுப்பு துணி கட்டி எதிர்ப்பை  வெளிகாட்டினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் பேசியதாவது:-
திரும்ப பெற வேண்டும்
பொதுவாக உள்நாட்டு வணிகத்தின் மீதான தாக்குதல் கடந்த  25 ஆண்டாக நடந்து வருகிறது. தற்போது இது அதிகரித்து உள்ளது. இதன் விளைவாக தற்போது தங்கம் மீது கலால் வரி  விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வணிகம், தொழில்கள் அழிந்து வருகிறது. மத்திய அரசு விதித்துள்ள தங்கம் மீதான கலால் வரியை நடுத்திர மற்றும் குறு நகைக்கடை உரிமையாளர்களால் கடைபிடிப்பது கடினம்.
இந்தியாவில் பல துறைகளில் அன்னிய ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது  தங்கத்தில் அன்னிய ஆதிக்கம் கொண்டு வரும் நயவஞ்ச செயலில் மத்திய அரசு  ஈடுபடுகிறது. எனவே தங்க வியாபாரிகளை பாதிக்கும் கலால் வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவையின் பொது செயலாளர் கே.தேவராஜ், மகாராஷ்டிரா மித்ரா மண்டல் தலைவர்  ஜெய்தீப் பாபா, பெங்காலி கோல்டு ஸ்மித் தலைவர் அம்சத் அலி, கமிட்டி  உறுப்பினர் உமேஷ் குமார், தமிழ்நாடு நகை்கடை உரிமையாளர்கள் அலய்டு பெடரேசன் நிர்வாகிகள்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply