- செய்திகள், வணிகம்

வங்கியில்பெற்ற ரூ.7800 கோடி கடனை கட்டாத வழக்கு கைதாவாரா விஜய் மல்லையா?

பெங்களூரு, மார்ச். 7:-

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனரும், சாராய சக்கரவர்த்தி என அழைக்கப்படும் விஜய் மல்லையா  பெற்ற ரூ.7,800 கோடி கடனை திருப்பிச் செலுத்தாத வழக்கில் ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனு மீது கடன் மீட்பு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளிக்கிறது.

யு.பி. குழுமத்தின்கீழ் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங்பிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்திய விஜய் மல்லையா  பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.7,800 கோடி கடன் பெற்று இருந்தார்.

நீண்ட நாள்களாக கடனை திரும்ப செலுத்தாத நிலையில், விஜய் மல்லையாவை "வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்' என்ற பட்டியலின்கீழ்  யுனைடெட் வங்கி , ஸ்டேட் வங்கியும் அறிவித்தன.

மேலும், பாரத ஸ்டேட் வங்கி தன்னை கடன் மோசடியாளராக அறிவித்ததற்கு எதிராக விஜய் மல்லையா டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் முறையிடவும் நீதிமன்றம் மல்லையாவுக்கு அறிவுறுத்தியது.

இதற்கிடையே, பாரத ஸ்டேட் வங்கி  தேசிய கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் விஜய் மல்லையா மீது அளித்த புகாரில் வங்கிகளில் ரூ 7800 கோடி கடனை வாங்கிவிட்டு திருப்பி கட்டாத விஜய் மல்லையாவை கைது செய்து, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யவேண்டும், மல்லையாவுக்கு எதிராக நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தீர்பாயத்தின் நீதிபதி ஜார்ஜ் ஜோசப் தனது உத்தரவை கடந்த 4-ந்தேதி ஒத்திவைத்தார்.

சமீபத்தில் டியாகோ நிறுவனத்துக்கு தனது யு.பி. குழுமத்தை விற்பனை செய்ததன்  மூலம் ரூ.550 கோடி மல்லையாவுக்கு  கிடைத்தது. இந்த பணத்துடன் லண்டனில்  குடியேற மல்லையா திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில், விஜய் மல்லையா மீதான தீர்பாயத்தின் உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவில் மல்லையா கைதாவாரா, அல்லது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு, லண்டனில் குடியேறுவது தடுக்கப்படுமா என்பது இன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply