- உலகச்செய்திகள், செய்திகள்

வங்கிகளிடம் பெற்ற கடன் தொகை ரூ.4 ஆயிரம் கோடியை செலுத்த விஜய் மல்லையா ஒப்புதல்

புதுடெல்லி, மார்ச் 31:-

வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் போய் வசிக்கும் கிங்பிஷர் குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா, கடன் தொகையில் ரூ.4 ஆயிரம் கோடியை செப்டம்பர் மாதத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக நீதிமன்றத்திடம் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

9 ஆயிரம் கோடி

கிங்பிஷர் விமான நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லை   வங்கிகளிடம் பெற்ற ரூ. 9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால்  “ வேண்டுமென்றே வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத மோசடியாளர்'' என வங்கிகள் அறிவிப்புச் செய்தன.

இந்நிலையில், தனது யு.பி. டிஸ்டிலர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை இங்கிலாந்து நிறுவனத்துக்கு விற்பனை செய்து விட்டு, இந்த மாத தொடக்கத்தில் லண்டன் அருகே ஒரு பண்ணை வீட்டில் விஜய் மல்லையா குடிபெயர்ந்தார்.

திட்டம்

இவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் வங்கிகள் இறங்கி, நீதிமன்றத்தில் மனு செய்தன. இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் மல்லையாவை நேரில் ஆஜராகுமாறு  உத்தரவிட்டது.

இதற்கிடையே தான் தொழில் நிமித்தமாகவே வெளிநாட்டில் வசிப்பதாக சமீபத்தில் தன்னிலை விளக்கம் அளித்த மல்லையா, திடீரென கடனின் பெரும்பகுதியை திருப்பிச் செலுத்துவதாக நேற்று முன்தினம் வங்கிகளின் கூட்டமைப்பிடம் ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

புதிய திட்டம்

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ஆர்.எப். நாரிமன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று  கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், விஜய் மல்லையா சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளிடம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யு.பி.நிறுவனம், கிங்பிஷர் பின்வெஸ்ட் நிறுவனம் சார்பில் பெற்ற ரூ. 6 ஆயிரத்து 903 கோடி கடனில் ரூ. 4 ஆயிரம் கோடியை  செப்டம்பர் மாதத்துக்குள்  திருப்பிச் செலுத்த விஜய் மல்லையா தயாராக இருக்கிறார். மேலும், இந்த திட்டம் குறித்த விரிவான அறிக்கையை வங்கிகளின் கூட்டமைப்பிடம் ஏற்கெனவே ஆலோசனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

வீடியோ கான்பிரன்சிங்

அதுவரை இந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கான திட்ட அறிக்கையை மூடிய உறையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும், ஊடகங்களுக்கு தெரிந்தால் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.  லண்டனில் வசிக்கும் மல்லையாவிடம் முறைப்படி ஆலோசனை நடத்தியபின் அவரின் ஒப்புதலைப்பெற்றபின், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மனுவில் தெரிவித்து இருந்தார்.

அப்போது, மல்லையா இந்தியாவுக்கு வருவாரா? என அவரின் வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மல்லையா இப்போது வௌிநாட்டில் இருக்கிறார். வீடியோ கான்பிரன்சிங் மூலம் அவரிடம் ஆலோசித்தோம். ஊடகங்கள் மல்லையாவுக்கு எதிரான சூழலை உண்டாக்குகின்றன. அதனால் வீடியோ மூலம் ஆலோசனை நடத்தினோம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

7-ந்தேதி

வங்கிகளின் கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மல்லையாவின் திட்ட அறிக்கையை தீவிர ஆலோசனை செய்த பின், பதில் தாக்கல் செய்வதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, வங்கிகள் வரும் ஏப்ரல் 7-ந்தேதிக்குள் தங்கள் பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாக்ஸ் மேட்டர்…..

மல்லையாவால் உயர்ந்த பங்குகள் விலை

வங்கிகளில்  பெற்ற கடனில் ரூ.4 ஆயிரம் கோடியை திருப்பிச் செலுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா வழக்கறிஞர்கள் நேற்று அறிக்கை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, யுனைடெட் ப்ரூவெரீஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை 12.20 சதவீதம் நேற்று உயர்ந்தது.

Leave a Reply