- உலகச்செய்திகள், செய்திகள்

வங்காளதேசத்தில் திருப்பம் பத்திரிகை ஆசிரியர் கொலையில் அல்கொய்தா தீவிரவாதி கைது

டாக்கா, மே 16:-

வங்காளதேசத்தில் வார பத்தரிகை ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வங்காள தேசத்தில் (ஒரே பாலின உறவாளர்கள் (லெஸ்பியன்கள் மற்றும் கே), இரு பாலின உறவாளர்கள், திருநங்கையர்களை உள்ளிட்ட)  எல்.ஜி.பி.டி பிரிவினருக்காக வாரப்பத்திரிகை நடத்திய சுல்ஹாஸ் மணன், அவரின் நண்பர் ராபி டோன்  ஆகியோர் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி 6-க்கும் மேற்பட்ட மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இது குறித்து கொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியரின் மனைவி போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில், அல்கொய்தா தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து டாக்கா மாநகர போலீஸின் செய்தித்தொடர்பாளரும், துணை ஆணையருமான மரூப் ஹூசைன் சர்தார் கூறுகையில், “ பத்தரிகை ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான ஷரீப்புல் இஸ்லாம் எனப்படும் ஷாகிப் என்பவரை கைது செய்துள்ளோம்.  இவர் அல்கொய்தாவின் பிரிவான அன்சருல்லா (அன்சர்-அல்-இஸ்லாம்) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். இந்த கொலைக்கு பிறகு, குல்னா பகுதியில் இவன் பதுங்கி இருந்தான். இவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.'' என்று தெரிவித்தனர்.

வங்காளதசேத்தில் கடந்த ஒரு மாதத்தில் இந்து தையல் தொழிலாளி, பேராசிரியர், சிந்தனைவாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வந்ததில், திடீர் திருப்பமாக தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கள் நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். அமைப்பினர் இல்லை என்று வங்காளதேச அரசு கூறிவரும் நிலையில், இப்போது அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply