- செய்திகள், மாநிலச்செய்திகள்

லாலு பிரசாத்துக்கு எதிரான வழக்கு வாபஸ் பீகார் மாநில அரசு நடவடிக்கை

பாட்னா, ஜன.20:-

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான வழக்கு ஒன்றை பீகார் மாநில அரசு வாபஸ் பெற்று உள்ளது.
போராட்டம்

மத்திய அரசின் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடக் கோரி லாலு பிரசாத் யாதவ் தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந் தேதி பீகார் மாநிலத்தில் முழு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

அப்போது, ராஷ்ரீய ஜனதா தளம் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கோத்வாலி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதில், லாலு பிரசாத் மற்றும் அவருடைய மகன்கள் தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் உள்ளிட்ட 262 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த வழக்கை பாட்னாவில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. போலீஸ் தரப்பில், கடந்த அக்டோபர் 13-ந் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முழு வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றபோது, நிதிஷ்குமார் கட்சியுடன், லாலு பிரசாத் யாதவ் கூட்டணியில் இல்லையென்றபோதிலும், அவருக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்தார்.
வழக்கு வாபஸ்

தற்போது, நிதிஷ் குமாரின் மந்திரிசபையில் லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் ஆகியோர் முறையே துணை முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பதவிகளை வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று லாலு பிரசாத்துக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் பீகார் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிபதி ஓம் பிரகாஷ் ஏற்றுக் கொண்டதுடன், வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.

Leave a Reply