- செய்திகள்

ரெயில் பயணிகள் ஆன்-லைனில் உணவுகளை தேர்வு செய்யும் வசதி மதுரை ரெயில் நிலையத்தில் அறிமுகம்…

மதுரை, ஆக. 19- மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் தங்கள் உணவுகளை ஆன் லைனில் தேர்வு செய்து வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுகம்

மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்களுக்கு தேவையான உணவை ஆன்-லைனின் தேர்வு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கார்க் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை கோட்டத்தில் மட்டும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 1.47 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.157 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 1.5 சதவீதம் அதிகமாகும். மேலும் மதுரை கோட்டத்தில் 5.73 லட்சம் சரக்குகள் கையாளப்பட்டு ரூ.67.58 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. மதுரை வழியாக செல்லும் பயணிகள், www.ecatering.irctc.co.in என்ற இணையதளம் முலம் உணவை தேர்வு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. அதன்படி மேற்கண்ட இணையத்தில் மதுரையில் கிடைக்கக்கூடிய உணவுகளின் பட்டியல் இருக்கும்.

கூடுதல் பெட்டிகள்

இதில் விருப்பமான உணவுகளை பயணிகள் இணையதளம் அல்லது 1800 1034 139 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி வழியாக குறுந்தகவல்களை அனுப்பி ஆர்டர் செய்யலாம். சம்பந்தப்பட்ட பயணியின் ரெயில் மதுரை வரும்போது அவர்கள் ஆர்ட்ர் செய்த உணவு வழங்கப்படும். மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் 8 பயணிகள் ரெயில் விரைவில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். மதுரை கோட்டத்துக்குட்பட்ட 27 ரெயில் நிலையங்களில் 50 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் நிறுவப்பட்டு உள்ளது. இதனால் டிக்கெட் கவுண்டரில் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு உள்ளது.

ஓய்வறைகள்

ரெயில் நிலைய ஓய்வு அறைகளை ஆன்லைனில் அறிமுகம் செய்யும் வசதி மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரெயில் நிலையங்களில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இவ்வசதி நெல்லை, தென்காசி உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு விரிவாக்கப்படும். மதுரை கூடல்நகர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply