- செய்திகள்

ரெயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க நவீன கருவி மாணவர்கள் கண்டுபிடிப்பு…

கோவை, ஜூலை29-
ரெயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க நவீன கருவிகளை கோவை மாணவர்கள்  கண்டுபிடித்து உள்ளனர்.

அறிவியல் கண்காட்சி
கோவை மாவட்ட பள்ளிகல்வித்துறை மற்றும் தொடக்க கல்வி இயக்கம் ஆகியவற்றுடன் மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறையும் இணைந்து  நடத்தும் "புத்தாக்க அறிவியல் கண்காட்சி- 2016’’ கற்பகம் பல்கலைக்கழகத்தில் நேற்று  நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி தலைமை தாங்கினார்.  கற்பகம் கல்வி நிலையங்களின்  தலைவர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் முருகன் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார், மெட்ரிக், சி.பி.எஸ்.சி. போன்ற அனைத்து விதமான பள்ளிகளில் பயிலும் தொடக்க கல்வி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கண்காட்சியில் 405 மாணவர்கள் தங்களது  அறிவியல் படைப்புகளை   கண்காட்சியில்   வைத்து இருந்தனர்.

யானை வருவதை முன்கூட்டியே அறியும் கருவி

கோவை பகுதியில் ரெயிலில் அடிபட்டு யானைகள் இறக்கின்றன. மதுக்கரை பகுதியில் தான்  யானைகள் அதிகமாக ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளன. யானைகள் ரெயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்கின்ற வகையில் மாணவர்கள் புதிய  கருவியை  கண்டு பிடித்துள்ளனர்.
இக்கருவியை (சென்சார்) ரெயில் தண்டவாளத்தில் பொருத்தி விட்டால் போதும். யானைகள் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது சற்று தூரத்தில் வருகிற ரெயிலுக்கு சிக்னல் கொடுத்து விடும். உடனடியாக ரெயில் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்து மெதுவாக இயக்கி விடுவார்.
இதே போன்று ஊருக்குள் வரும் யானையை முன் கூட்டியே எச்சரிக்கையுடன் இருக்கிற வகையில் புதிய சென்சார் கருவியையைும் கண்டுபிடித்து அசத்தினர்.
முன் எச்சரிக்கை ஒலி
யானைகள் வழித்தடத்தில்  பூமிக்கு அடியில் இக்கருவியை  ஆங்காங்கே பொருத்தி விட்டால் போதும். யானைகள் வரும் போது அக்கருவியானது  சிக்னல் கொடுப்பதோடு ஒலி எழுப்பி விடும். ஊருக்குள் இருக்கும் கருவியில் சிக்னல்  கிடைத்ததும் பொதுமக்கள் யானை வருவதை முன்கூட்டியே அறிந்து அதற்கு தகுந்தார்போல் முன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள ஏதுவாகும். இதனால் உயிர் பலி  ஏற்படாமல் தடுக்க முடியும். ஊருக்குள் யானைகளால் சேதாரம் ஏற்படுவதையும் தடுக்க இயலும்.
கண்காட்சியில் இந்த கருவிகள் பெரும் வரவேற்பை  பெற்றன.
இந்த கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த  அறிவியல் படைகளை உருவாக்கிய 81 மாணவ, மாணவிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ்களுடன் பரிசுகளும வழங்கப்பட்டன. இதில் 30 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply